அன்னூர்: புளியம்பட்டி ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (11ம் தேதி) நடக்கிறது. அன்னூர் அடுத்த புளியம்பட்டி, நேரு நகரில், தர்மசாஸ்தா ஐயப்பன் மற்றும் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு சபரிமலையில் உள்ளது போன்றே 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழா துவங்கியது. பவானி ஆற்றில் இருந்து தீர்த்த குடங்கள் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. நேற்று கணபதி ஹோமமும், முதற்கால பூஜையும் நடந்தது. இன்று காலையில் இரண்டாம் கால பூஜையும், மாலையில் மூன்றாம் கால பூஜையும், எண் வகை மருந்து சாத்துதலும், சுவாமி சிலைகளை பிரதிஷ்டை செய்தலும் நடக்கிறது. வரும் 11ம் தேதி காலை 7:30 மணிக்கு கோபுர கலசங்களுக்கும், சித்தி விநாயகர் மற்றும் தர்மசாஸ்தா ஐயப்பனுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.