பதிவு செய்த நாள்
11
டிச
2022
12:12
கீழக்கரை: மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல பாதை வழங்கிய தினமலர் நாளிதழின், 60 ஆண்டு கால வாசகரை, அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை கிழக்கு தெருவைச் சேர்ந்த விவசாயி முகம்மது சுஐபு, 75. இவர் இரண்டு மாதங்களுக்கு முன், காஞ்சிரங்குடி மேலவலசை கிராமத்தில் உள்ள பொன்னு சிறையெடுத்த அய்யனார் கோவிலுக்கு செல்லும் பிரதான பாதைக்காக, தன் நன்செய் நிலத்தில், 8 சென்ட் இடத்தை தானமாக வழங்கினார்.இதே போல, காஞ்சிரங்குடி, பக்கீரப்பா தர்காவில் இருந்து கடற்கரை ஓரமாக கிழக்கு முத்தரையர் நகர் செல்லும் தார் சாலைக்காக, தன்னுடைய புன்செய் நிலத்தில் இருந்து, 15 சென்ட் நிலத்தை தானமாக வழங்கி உள்ளார்.தற்போது அந்த சாலையில் கீழக்கரையில் இருந்து முத்தரையர் நகர் வரை டவுன் பஸ் இயக்கப்படுகிறது. ஹிந்து கோவில் மற்றும் பொதுமக்களின் பொது பாதைக்காக தன் நிலத்தை தானமாக வழங்கிய இவரின் செயல் அப்பகுதி மக்களால் பாராட்டப்படுகிறது.முகம்மது சுஐபு கூறியதாவது: கோவில் பாதைக்காக என் நிலத்தை தானமாக வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால், நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று வணங்கி வருகின்றனர்.நான், 60 ஆண்டுகளாக தினமலரின் தீவிர வாசகராக உள்ளேன். தினமலர் நாளிதழின் செய்திகளை அன்றாடம் படிப்பது என் வாடிக்கை. சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நாம் ஒவ்வொருவரும் விளங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.