பதிவு செய்த நாள்
12
டிச
2022
03:12
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அருள்பாலிக்கும் தர்மசாஸ்தா, புஷ்கலாதேவி திருக்கல்யாண விழா டிச., 26 அன்று நடக்கிறது.
பரமக்குடி தரைப்பாலம் அருகில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு புஷ்கலாதேவி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இதன்படி கேரளா மாநிலம் ஆரியங்காவு கோயிலில் நடக்கும் திருக்கல்யாணத்திற்கு அடுத்தபடியாக, பரமக்குடியில் கோலாகலமாக நடப்பது சிறப்பிக்கும். இக்கோயிலில் டிச., 25 அன்று தர்மசாஸ்தா, புஷ்கலாதேவி நிச்சயதார்த்த விழா இரவு 7:00 மணிக்கு நடக்க உள்ளது. தொடர்ந்து மறுநாள் (டிச., 25) காலை 9:45 மணி தொடங்கி, மாப்பிள்ளை அழைப்பு நிறைவடைந்து, திருமாங்கல்யம் மேள, தாளத்துடன் வீதி வலம் வர உள்ளது. மேலும் பெண் வீட்டார் அழைப்புக்கு பின், சவுராஷ்டிர குல கன்னிகை புஷ்கலா தேவிக்கும், தர்மசாஸ்தாவிற்கும் திருக்கல்யாணம் மற்றும் விவாஹ சடங்குகள் நடைபெறும். பின்னர் தீபாராதனைகள் நிறைவடைந்து, மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும். அன்று இரவு 7:00 மணிக்கு, புஷ்கலாதேவி சமேத தர்மசாஸ்தா திருக்கல்யாண கோலத்தில் யானை வாகனத்தில் பட்டணப்பிரவேசம் வர உள்ளார். தொடர்ந்து டிச., 27 காலை 6:30 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு மண்டல பூஜை, இரவு 7:00 மணிக்கு சர்வ அலங்காரத்துடன் ஐயன் திருவீதி வலம் வர உள்ளார். ஏற்பாடுகளை பரமக்குடி ஸ்ரீ தர்மசாஸ்தா சேவா சங்கத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.