பதிவு செய்த நாள்
12
டிச
2022
03:12
வேலுார்: பிரம்மன் வழிபட்ட மார்க்கபந்தீஸ்வரர் கோவில் சிம்ம குளத்தில், கடை ஞாயிறை முன்னிட்டு பெண்கள் நீராடி வழிபட்டனர். திருவண்ணாமலையில் ஜோதியாய் நின்ற ஈசனின் திருமுடியை கண்டதாக பொய் சொன்ன பிரம்மனுக்கு, சிவபெருமான் சாபமிட்டார். அதை நீக்கும் பொருட்டு, பிரம்மதேவன் வழிபட்ட தலம் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில் என, தல புராணம் கூறுகிறது. பிரம்மன் இத்திருத்தலத்தில், சிவபெருமானிடம் உபநயனம், பிரம்மோபதேசம், சிவதீட்சை பெற்றுள்ளார். இந்த சிம்மகுள தீர்த்தத்தில் பீஜாட்சர யந்திரம், ஆதி சங்கரரால் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் இத்தீர்த்த குளம், கார்த்திகை மாதம் கடைசி சனிக்கிழமை இரவு, 11:-55 மணிக்கு திறக்கப்படும். அதாவது கார்த்திகை கடைசி ஞாயிறு இரவு, 12:00 மணிக்கு இந்த தீர்த்தக்குளத்தில் குளித்தால், குழந்தை பேறு கிடைக்கும் என்பதும், பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்ற தீவினைகள் அகலும் என்பதும் நம்பிக்கை. முதலில் அருகில் உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு, கோவிலுக்கு அருகே உள்ள பிரம்மனால் உருவாக்கப்பட்ட பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, தொடர்ந்து சிம்மவாய் முகம் கொண்ட சிம்ம தீர்த்தத்தில் நள்ளிரவு, 12:00 மணிக்கு மூழ்கி எழ வேண்டும். பின் ஆலய மகா மண்டபத்தில் ஈர உடையுடன் மடியில் பூ, பழம், தேங்காய் வைத்துக்கொண்டு கோவில் பிரகாரத்தில் படுத்து உறங்கினால், கனவில் சிவபெருமான் மலர் வடிவில் தோன்றி குழந்தை வரம் அருள்வார் என்பது ஐதீகம். அல்லது கனவில் மலர்கள், பழங்கள், புத்தாடைகள் ஆகியவற்றை தாங்கியபடி முதியவர் காட்சி தந்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இப்படி வேண்டிக்கொண்டு குழந்தை வரம் பெற்றவர்கள், குழந்தை பிறந்த பின், மரகதாம்பிகை அம்பாள் சன்னதிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் தொட்டில் கட்டி வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டனர்.