பதிவு செய்த நாள்
13
டிச
2022
08:12
குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை அருகே, அய்யர்மலையில், 13ம் ஆண்டாக, 1,017 படிக்கட்டுகளில் உருண்டு ஏறி, பக்தர் நேர்த்திக்கடன் செலுத்தினார். அய்யர்மலையில் புகழ்பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் செங்குத்தாக 1,017 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் சிவாலயம் அமைந்துள்ளது.
இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார விழா கொண்டாடப்படுவது வழக்கம். 4வது சோமவார விழா நாளான நேற்று உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், கோவில் குடிபாட்டுக்காரர்கள் திரளாக வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதில், நங்கவரம் டவுன் பஞ்., தமிழ்சோலையை சேர்ந்த ஜீவானந்தம் என்ற பக்தர், 13வது ஆண்டாக, 1,017 படிக்கட்டுகளில் உருண்டு ஏறி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். இவரது தாத்தா நாகராஜன், 27 ஆண்டுகளாக உலக அமைதிக்காகவும், மக்கள் பசி, பட்டினியின்றி நலமாக வாழவும் வேண்டி, 1,017 படிக்கட்டுகளில் உருண்டு ஏறி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு வந்தார். அவரது மறைவுக்குப் பின், தன் தாத்தாவின் வேண்டுதலை தொடர்ந்து, 13வது ஆண்டாக இளைஞர் ஜீவானந்தம், 1,017 படிக்கட்டுகளில் உருண்டு ஏறி சுவாமி தரிசனம் செய்து தன் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.