பரமக்குடி: கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் கிராமம் முன்னேற்ற டிரஸ்ட் மற்றும் பரமக்குடி நாணல் ஸ்போக்கன் இங்கிலீஷ் சார்பில், மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் அன்னபூரணி பூஜை நடந்தது.
விழாவில் அன்னை சாரதா தேவி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி விவேகானந்தா கேந்திர கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் ஐயப்பன் சொற்பொழிவாற்றினார். அப்போது, கன்னியாகுமரியை தலைமை இடமாகக் கொண்டு தென் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் 75 பாலர் பள்ளிகள் நடந்து வருகிறது. இதில் 2800 குழந்தைகளுக்கு மதிய உணவு, கல்வி கொடுக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 16 பாலர் பள்ளிகள் உள்ளன. ஆகவே அன்னை சாரதா தேவியின் பிறந்தநாளில் இந்த அன்ன பூஜை நடந்து வருகிறது, என்றார். தொடர்ந்து நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட அரிசி குவித்து வைக்கப்பட்டு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் ஆதிசங்கரர் இயற்றிய அன்னபூர்ணா ஸ்தோத்திரம், பகவத் கீதையின் 11 வது அத்தியாயமாகிய விஸ்வரூப தரிசனம் கூறி வழிபாடு நடத்தப்பட்டது. நாணல் சுரேஷ் கண்ணன் நன்றி கூறினார்.