பதிவு செய்த நாள்
27
டிச
2022
03:12
சேலம்: ‘கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், தங்களது மொபைல் போனை பாதுகாப்பாக வைத்து செல்ல, ஜன., 31க்குள் பெட்டக வசதி ஏற்படுத்த வேண்டும்’ என, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், மண்டல இணை கமிஷனர், உதவி கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்கள் மொபைல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் மொபைல்போனை பாதுகாப்பு பெட்டகங்களில் பாதுகாத்து, மீண்டும் ஒப்படைக்க வேண்டும். இந்த நடைமுறைகளை மாநிலம் முழுவதும் அனைத்து கோவில்களில் செயல்படுத்திட வேண்டும்.
பக்தர்கள் மொபைல்போனை கோவிலுக்குள் கொண்டு வர அனுமதி இல்லை. இதை மீறி கொண்டு செல்லப்படுவது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும். மொபைல்போன் திருப்பி வழங்கப்பட மாட்டாது என்ற வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பலகையை கோவில் நுழைவு வாயில்களில், பக்தர்கள் எளிதில் அறியும் வகையில் வைக்க வேண்டும். மொபைல்போனை கோவில் வளாகத்திற்குள் பெற்று, பாதுகாத்து வைத்திடும் வகையில் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்த வேண்டும். மொபைல்போனை பெற்று அதற்கு அத்தாட்சியாக டோக்கன் வழங்கும் முறை அமல்படுத்தப்பட வேண்டும். பாதுகாப்பதற்கான கட்டணமாக ஒரு மொபைல்போனுக்கு, 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். மொபைல்போனை பக்தர்களிடம் மீண்டும் வழங்கும்போது டோக்கன் மற்றும் பக்தரின் அடையாளம் உறுதி செய்ய வேண்டும். கோவில் வளாகத்திற்குள் மொபைல்போன் பாதுகாப்புக்கான இடத்தை ஒதுக்கீடு செய்து, வரும், ஜன.,31ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார். இதையடுத்து பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்த கோவிலில் இடத்தினை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.