பதிவு செய்த நாள்
30
டிச
2022
09:12
ஸ்ரீவைகுண்டம்: நவதிருப்பதி பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகலமாக துவங்கியது. முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு விழா, வரும் ஜன., 2ம் தேதி நடக்கிறது.
மார்கழி திரு அத்யயன திருவிழா, நவதிருப்பதி பெருமாள் கோவில்களில், கடந்த 23ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது. நவதிருப்பதிகளில், முதல் ஸ்தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான் சுவாமி கோவிலில், தினமும் காலையில் பெருமாள் மண்டபத்திற்கு எழுந்தருளுதலும், மாலை 6:00 மணிக்கு சேர்த்தியில் ராஜாங்கமும், இரவு 9:00 மணிக்கு ராஜாங்கமும் நடைபெற்று வருகிறது. வரும் ஜன., 1ம்தேதி காலை 6:00 மணிக்கு மண்டபத்திற்கு எழுந்தருளும் பெருமாள், மாலை 6:00 மணிக்கு ஆண்டாள் திருக்கோலத்திலும், இரவு 9:00 மணிக்கு கினி திருக்கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்நாளுடன் பகல் பத்து திருவிழா நிறைவுற்று, மறுநாள் 2ம் தேதி முதல் இராப்பத்து திருநாள் துவங்குகிறது. அன்று வைகுண்ட ஏகாதசி திருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று காலை 6:00 மணி முதல் ஆதிசேஷ வாகனத்தில் தாயார், ஆழ்வாராதிகளுடன் சயன திருக்கோலத்தில் நவதிருப்பதி உற்சவர்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான், ஸ்ரீவரகுணமங்கை நத்தம் எம்மிடர்கடிவான், திருப்புளிங்குடி காய்சினவேந்தபெருமாள், பெருங்குளம் மாயக்கூத்தபெருமாள், இரட்டைதி ருப்பதி வில்லிமங்கலம் தாமரைக்கண்ணன், தேவர்பிரான், தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர், திருக்கோளூர் நித்யபவித்ரன், ஆழ்வார்திருநகரி பொலிந்துநின்றபிரான் ஆகயோர், தாயார்களுடன் கிழக்குமுக மண்டலமாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அன்று மாலை 3:00 மணிக்கு சயனதிருக்கோலம் படி களைந்து திருமஞ்சனமும், தொடர்ந்து அலங்காரமும், அதனை தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டத்தில் இரவு 7:00 மணிக்கு தங்கத்தோளுக்கினியான் வாகனத்தில் சுவாமி கள்ளர்பிரான் தங்ககுடை தாங்கி, ரத்தின தலைப்பாகை அணிந்து வர தீப்பந்தங்களின் அணிவகுப்புடன் பரமபதவாசல் எனும் ‘சொர்க்கவாசல் திறப்பு’ நடக்கிறது. அதனை தொடர்ந்து இரவு 10:00 மணிக்கு பத்தி உலாவுதல், கொடியேற்றம், கற்பூரசேவை நடக்கிறது. ஆழ்வார்திருநகரியில் அன்று இரவு 10:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பும், தென்திருப்பேரையில் அன்று நள்ளிரவு 1:00 மணிக்கும் சொர்க்கவாசல் திறப்பும் நடக்கிறது. பக்தர்களின் வசதிக்காக திருநெல்வேலி, துாத்துக்குடி, திருச்செந்துார் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.