பதிவு செய்த நாள்
04
செப்
2012
10:09
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் தினமும் நடக்கும், திருமஞ்சன உலாவை தினமும் நடத்த, கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரம் கோயிலில் தினமும் காலை 7.30 மணிக்கு நடைபெறும் விளா பூஜையில், ராமநாதசுவாமிக்கு கோடி தீர்த்தத்தால், அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். இதற்காக, வெள்ளிக்குடத்தில் சேரிக்கப்படும் கோடி தீர்த்தம், மேளதாளத்துடன், ஆலவட்டம் அலங்காரத்துடன், யானையின் மீது வைத்து, நான்கு ரதவீதியில் ஊர்வலமாக எடுத்து வருவர். பின், சுவாமிக்கு அபிஷேகம் செய்வர். மழை காலங்களில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உலா வந்து, அபிஷேக ஆராதனைகள் செய்வதும் வழக்கம். நேற்று நாதஸ்வர வித்வான் வராததால், திருமஞ்சன வீதிஉலா நடைபெறாமல், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. வெள்ளிக்குடத்தில் தீர்த்தம் சேகரித்து, யானையின் மீது அமர்ந்து வருபவர் வராமல் போவது, ஆலவட்டம் எடுத்து வரும் ஊழியர்கள் வரமறுப்பது, மேளம் வாசிப்பவர்கள் விடுப்பில் செல்வது ஆகிய காரணங்களால், மாதத்தில் பல நாட்கள் திருமஞ்சன உலா நடைபெறுவதில்லை என, பக்தர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். யானை வரமுடியாத நிலையில் கூட, நான்கு ரத வீதியில் கோடி தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் நடந்து வந்தது. இந்நிலை மாறி, தற்போது திருமஞ்சன உலாவே, அவ்வப்போது நிறுத்தப்படும் நிலை உள்ளது. இதைத் தவிர்க்க, தினமும், முறையாக திருமஞ்சன உலா, விளா பூஜைகள் நடத்திய பின், சுவாமிக்கு அபிஷேகம் செய்ய, கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.