பதிவு செய்த நாள்
06
ஜன
2023
11:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று இரவு, 10:00 மணிக்கு, சுவாமி சன்னதியிலிருந்து நடராஜர், சிவகாமசுந்தரி புறப்பட்டு, ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்ற அதிகாலை, 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்மனுக்கு, சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா...’ என, பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து, திருமஞ்சன கோபுர வாயில் வழியாக நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மனும் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது, பக்தர்கள் வழி நெடுகிலும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.