குப்பையால் அசுத்தமடையும் ஜம்புலிபுத்தூர் கோயில் தெப்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2023 10:01
ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் தெப்பத்தில் தேங்கும் நீரில் குப்பை சேர்வதால் அசுத்தம் அடைகிறது. 500 ஆண்டுகள் பழமையான இக்கோயில் முன் பகுதியில் தெப்பம் அமைந்துள்ளது. நான்கு புறமும் படித்துறை அமைக்கப்பட்ட தெப்பத்தில் தேங்கும் நீரையே கோயில் தேவைக்கு கடந்த காலங்களில் பயன்படுத்தி வந்தனர். கடந்த பல ஆண்டுகளாக தெப்பம் பராமரிப்பு இல்லை. தெப்பத்தில் நான்கு புறமும் உள்ள படிக்கட்டுகள் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. அப்பகுதியில் சேரும் குப்பையை தெப்பத்தில் தள்ளிவிடுகின்றனர். கடந்த சில மாதத்திற்கு முன் பெய்த மழையில் தெப்பத்தின் பாதிக்கு மேல் நீர் தேங்கி உள்ளது. தேங்கிய நீருடன் குப்பை சேர்வதால் தற்போது கழிவு நீர் போல் காட்சி தருகிறது. இக்கோயில் கும்பாபிஷேகத்திற்கான புனரமைப்பு பணிகள் பல லட்சம் செலவில் உபயதாரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கும்பாபிஷேகத்திற்கு முன் கோயிலுக்கான தெப்பத்தையும் சீரமைத்து சுத்தமான நீர் தேங்க ஹிந்து அறநிலையத்துறை, ரெங்கசமுத்திரம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.