பதிவு செய்த நாள்
04
செப்
2012
11:09
ஆழ்வார்குறிச்சி:பாப்பான்குளம் கருத்தீஸ்வரர் கோயிலில் ஆவணித் திருவிழா வரும் 16ம் தேதி நடக்கிறது. பாப்பான்குளம் மெயின்ரோட்டில் கருத்தீஸ்வரர் கோயில் உள்ளது. பாண்டிய மன்னன் ஆதித்தவர்மன் ஆட்சிக்காலத்தில் அவருக்கு சிற்றரசாக இருந்த சதுர்வேதி என்னும் மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டது. ராமபிரான் தென்திசை நோக்கி சுற்று வலம் வந்தபோது சந்தியாவந்தன பூஜைக்கு நேரமானது. அதற்கு சிவபெருமான் கருணையாற்றில் சுக்காம்பாறை என்னுமிடம் சந்தியாவந்தன பூஜைக்கு ஏற்ற இடம் என கூறியதாகவும், ராமபிரான் கருத்தை அறிந்து கூறியதால் இங்குள்ள சிவபெருமானின் பெயர் திருக்கருத்தீஸ்வரர் என்றும், ஆயக்கலை அறுபத்து நான்கினையும் தனது உடல் அமைப்பாக கொண்டதால் அம்பாள் பெயர் அழகம்மாள் எனவும் பெயர் பெற்றதாக வரலாறு கூறுகிறது. இங்குள்ள குருபகவான் மிகவும் சிறப்பம்சத்துடன் உள்ளது. இங்கு சொக்கநாதர் மீனாட்சியம்பாளுக்கும், காசிவிஸ்வநாதர் விசாலாட்சி அம்பாளுக்கும் தனி சன்னதி அமைந்துள்ளது. இவ்வளவு சிறப்பு பெற்ற இக்கோயிலில் பாப்பான்குளம், மடவார்விளாகம் ஊர் பொதுமக்கள், சிவனேச தொண்டர்கள், அருள்நந்தி அடியார் பேரவை இணைந்து வரும் 16ம் தேதி ஆவணித் திருவிழா நடத்துகின்றனர்.அதிகாலை 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், பின்னர் 6 மணியளவில் உதயகால பூஜையும், 8 மணியளவில் யாக பூஜைகளும் நடக்கிறது. காலை 11 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேகம், பூஜையும், மதியம் 12 மணிக்கு மேல் விசேஷ அன்னதானமும், சிறப்பு பூஜையும் நடக்கிறது. இரவு 7.30 மணியளவில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகின்றனர்.