ராஜபாளையம்: ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பறவை அன்னம் காத்தருளிய கோயிலில் கேட்பாரற்று உள்ள 800 ஆண்டு பழமையான கல்வெட்டுகளை படி எடுக்கும் பணியில் வரலாற்று ஆய்வு மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி முதுகலை மற்றும் வரலாற்று ஆய்வு மையம் இணைந்து புராதன வரலாற்று சின்னங்களை மீட்கும் களப்பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலர் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் கூறுகையில், சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் பாண்டியர்களால் கட்டப்பட்ட இக்கோயில் முழுவதுமாக இடிந்த நிலையில், கருவறை மட்டும் பிற்காலத்தில் புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. கோயில் கற்கள் மற்றும் துாண்கள் பூமிக்கு கீழே புதைந்து கிடந்தது இடிபாடுகளில் உள்ள கற்களை கனரக இயந்திரம் மூலம் தோண்டி எடுத்து கோயில் நிர்வாக குழுவினர் முன்னிலையில் வரிசை படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் பழமையான கோயில் கட்டட கற்கள் மற்றும் துாண்கள் மூலம் பெரிய கோயில் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகிறது. வரலாற்று துறை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்வெட்டை கண்டறிந்து சுத்தம் செய்யும் முறை கல்வெட்டுகளை உபகரணங்கள் கொண்டு கல்வெட்டு படி எடுக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் உதயகுமார், முத்துப்பாண்டி ஆகியோரால் பயிற்சி அளிக்கப்பட்டது. இங்கு 25க்கும் மேற்பட்ட துண்டு துண்டாக உள்ள கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டும் மீதம் உள்ளவைகள் ஒருங்கிணைத்து அதில் உள்ள செய்தியை வெளிக்கொண்டுவரும் பணி நடைபெற்று வருகிறது. கிடைத்த சில கல்வெட்டுகளை கொண்டு முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் மெய் கீர்த்தியோடு கல்வெட்டு தொடங்குகிறது, என கூறினார். கல்லுாரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் கந்தசாமி கூறுகையில், மிகப் பழமையான இக்கோயில் பகுதியை வெண்பைக்குடி நாட்டு கருங்குளமான சாதவாசகநல்லுார் என்று அழைக்கப்பட்ட குறிப்புகள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. படியெடுக்கும் பணிகளால் பயிற்சி மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைவதுடன் அது பற்றிய விளக்க உரை மூலம் இப்பகுதியில் வரலாற்று தொடர்ச்சியை அறிய முடியும். நமது பகுதியை சுற்றி அமைந்துள்ள மாயூரநாத சுவாமி கோயில், தெற்கு வெங்கா நல்லுார் சிதம்பரேஸ்வரர் கோயில், சோழபுரம் சிவன், பெருமாள் கோவில்களில் உள்ள கல்வெட்டுகள் மூலம் பழங்கால வரலாற்றை அறிய முடிகிறது, என்றார். இந்நிகழ்வில் வரலாற்று துறை பேராசிரியர்கள் ரமேஷ் குமார், ஜெகந்நாத் கலந்து கொண்டனர்.