திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவை நேற்று காலை முதல் மீண்டும் துவங்கியது. திருமலை ஏழுமலையான் கோவிலில் அதிகாலையில் முதல் சேவையாக ஏழுமலையானை துயிலெழுப்பும் சுப்ரபாத சேவை நடைபெறுவது வழக்கம். மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்கள் ஒரு மாத காலம் பாராயணம் செய்யப்படுகிறது. இதன்படி கடந்த டிச., 17ம் தேதி முதல் திருமலையில் மார்கழி மாதத்தை முன்னிட்டு திருப்பாவை பாசுரங்களின் பாராயணம் துவங்கியது. ஜன., 14ம் தேதியுடன் மார்கழி மாதம் நிறைவு பெற்றது. இதையடுத்து நேற்று முதல் அதிகாலையில் நடக்கும் சுப்ரபாத சேவை மீண்டும் துவங்கியுள்ளது.