பதிவு செய்த நாள்
16
ஜன
2023
01:01
கோபி: குண்டம் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பாரியூர் கொண்டத்து காளியம்மன், பிரமாண்ட மலர் பல்லக்கில், நேற்று அதிகாலை கோபியில் பவனி வந்தார்.
ஈரோடு மாவட்டம் கோபி, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா, கடந்த, 12ம் தேதி வெகு விமரிசையாக நடந்தது. இதையடுத்து மலர்ப்பல்லக்கு ஊர்வலம், கோலாகலமாக நேற்று அதிகாலை நடந்தது.
சம்பங்கி, மஞ்சள் மற்றும் வெள்ளை செவ்வந்தி, ரோஜா, வெள்ளை சாந்தினி, மரிக்கொழுந்து உள்ளிட்ட மலர்களால், பிரமாண்ட மலர்ப்பல்லக்கு தயார் செய்யப்பட்டது. பூக்கள் மீது சீரியல் பல்பு மற்றும் ஒளிரும் விளக்குகளால் அலங்காரம் செய்தனர். மலர்கள் மற்றும் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர், அம்மன் கோவிலில் இருந்து, நேற்று அதிகாலை, 1:30 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டார். பாரியூரில் துவங்கி பதி, வெள்ளாளபாளையம் பிரிவு, நஞ்சகவுண்டம்பாளையம் பிரிவு, முருகன்புதுார், மேட்டுவலவு வழியாக, கோபி நகரை மலர் பல்லக்கு அடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து, பல்லக்கில் பவனி வந்த அம்மனை தரிசித்தனர். பிறகு சரவணா தியேட்டர் சாலை, பெருமாள் கோவில், வீதி, ராஜவீதி, கடை வீதி வழியாக, கோபி பெருமாள் கோவிலை அடைந்தது. அம்மன் மலர் பல்லக்கு ஊர்வலத்தால், கோபி டவுன் பகுதி நேற்று காலை விழாக்கோலம் பூண்டது.