பதிவு செய்த நாள்
19
ஜன
2023
12:01
மதுரை, துறவு என்ற சொல்லுக்கு மஹாபெரியவரே இலக்கணம் என்று இந்திரா செளந்தர்ராஜன் பேசினார்.
மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் நேற்று மாதாந்திர அனுஷ விழா கொண்டாடப்பட்டது. மஹாபெரியவர் விக்ரகத்திற்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.
தொடர்ந்து குரு மகிமை எனும் தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசியதாவது: மஹாபெரியவர் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இன்றி வாழ்ந்தவர்.
துறவி என்கிற சொல்லுக்கு ஏற்ப சகலத்தையும் துறந்தவராகவே திகழ்ந்தார்.
அவரை காண உலக பணக்காரர்களில் ஒருவரான பிர்லா வந்திருந்தார். அப்போது பெரியவர் மாட்டுத்தொழுவம் அருகே ஓலைப்பாயில் சுருண்டு படுத்திருந்தார். அதைப் பார்த்த பிர்லா பெரியவர் பொருளாதார ரீதியாக சிரமத்தில் இருப்பதாக நினைத்ததோடு, பளிங்கு கற்களால் பெரியவர் தங்குவதற்கு கட்டிடம் கட்டித் தருவதாக கூறினார். பெரியவரோ நான் துறவி. துறவி, தேக செளகர்யங்களுக்கு எப்போதும் இடமளிக்கக்கூடாது. அப்படி நடந்தால் அது அடுத்தடுத்து சுகத்தை கேட்கும். உடம்பு எப்போதும் மனதுக்கு கட்டுப்பட்டு கிடக்க வேண்டும்.
ஆனால் நடைமுறை வாழ்வில் அது மிக கடினம். அவ்வாறு இருக்க வேண்டும் என்றே துறவிகளாகிய நாங்கள் இருக்கிறோம் என்றார். இருவேளை எளிய உணவு, தவம், தியானம், பூஜை, தன்னை நாடிவருபவர்களுக்கெல்லாம் ஆசி வழங்குதல் என்றே அவர் தன் வாழ்நாள் முழுவதும் திகழ்ந்தார். இவ்வாறு பேசினார். ஏற்பாடுகளை நிர்வாகிகள் டாக்டர் டி ராமசுப்பிரமணியன், கே ஸ்ரீகுமார், வெங்கட்ரமணி, வெங்கடேசன், ஜோதிவேல், சந்திரன், சந்திரசேகரன், சீனிவாசன், ராதாகிருஷ்ணன், சங்கரன் செய்திருந்தனர்.