பதிவு செய்த நாள்
19
ஜன
2023
10:01
சென்னை : ஹிந்து சமய அறநிலையத் துறை, கோவில்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பில் கோட்டை விடுகிறது என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அவரது அறிக்கை: திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவல் கிராமத்தை சேர்ந்த, அறநிலையத் துறை கோவில் ஊழியர் கிருஷ்ணன், கோவில் சுற்றுச்சுவரில் அமர்ந்து மது அருந்தியதை தட்டி கேட்டதால், கோவில் வளாகத்திற்கு உள்ளேயே வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. கோவில்களில் நடக்கும் முறைகேடுகளையும், சட்டத்திற்கு புறம்பான செயல்களையும் தடுக்க வேண்டிய அறநிலையத் துறை, கோவில் உண்டியல் பணத்தை மட்டுமே நோக்கமாக வைத்துள்ளது. கோவில்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஆகியவற்றை கோட்டை விட்டு கொண்டிருக்கிறது. தமிழகம் முழுதும் சாராய கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்வது, இளைஞர்கள் இதுபோன்ற குற்ற செயல்கள் புரிய காரணமாக அமைந்து உள்ளது. இனியும் கோபாலபுர குடும்பத்தை மகிழ்விப்பது மட்டுமே, தன் பணி என்று இருக்காமல், அமைச்சர் சேகர்பாபு உடனே, கோவில் ஊழியர்களுக்கும், உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். உயிரிழந்த கோவில் ஊழியர் குடும்பத்திற்கு, முதல்வர் ஸ்டாலின், உடனே தகுந்த நிவாரணம் அளிப்பதுடன், அவரது இரு மகன்களுக்கும், அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.