பதிவு செய்த நாள்
23
ஜன
2023
05:01
அன்னூர்: சித்தர்கள் வழிபட்ட பழமையான பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 29ம் தேதி துவங்குகிறது.
அன்னூர் அருகே காரேகவுண்டன் பாளையம் ஊராட்சி, வாரணாபுரத்தில் குன்றின் மீது பழனி ஆண்டவர் வீற்றிருக்கிறார். இக்கோவில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலில் எந்தக் காலத்திலும் வற்றாத சுனை உள்ளது. இந்த சுனை தீர்த்தத்தில் தான் மூலவருக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது. இக்கோவிலில் கருங்கற்களால் கருவறை, முன் மண்டபம், ஏகமண்டபம் அமைக்கப்பட்டுள்ளன. இத்துடன் விநாயகர், கதிர்காம வேல், இடும்பன், கடம்பன், கருப்பராயன் மற்றும் 18 சித்தர்களுக்கும் கோவில்களும் விமானங்களும் அமைக்கப்பட்டுள்ளன, சுற்றுச்சுவர், தரைத்தளம், நடைபாதை அமைக்கப்பட்டு, பணிகள் நிறைவு பெற்றுள்ளன. கும்பாபிஷேக விழா வருகிற 29ம் தேதி காலை முளைப்பாலிகை ஊர்வலத்துடன் துவங்குகிறது. அன்றைய தினம் மாலை திருவிளக்கு வழிபாடு, 108 வகையான மூலிகைகளால் அபிஷேக பூஜை நடக்கிறது. 30ம் தேதி காலையில் விமான கலசங்கள் நிறுவுதலும், மாலையில் திருப்புகழ் இன்னிசையும், இரவு ஆன்மீக சொற்பொழிவும் நடக்கிறது. வரும் 31ம் தேதி காலை மூர்த்திகளுக்கு எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. பிப்ரவரி 1ம் தேதி காலை 6:30 மணிக்கு விநாயகர், கதிர்காம வேல், சித்தர்கள் மற்றும் இடும்பன் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 9:45 மணிக்கு விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவில் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், ஆசியுரை வழங்குகின்றனர்.