பதிவு செய்த நாள்
29
ஜன
2023
10:01
திருப்பூர்,-உயரமான கோபுரங்கள் இருக்கும் கோவில்களில், இடிதாங்கியை கட்டாயம் பொருத்த வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ள, பிரசித்தி பெற்ற கோவில்களில் மட்டும், இடிதாங்கி பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து கோவில்களிலும் இடிதாங்கி பொருத்த வேண்டுமென, ஹிந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, தமிழகம் முழுதும், விடுபட்ட கோவில்களில், இடிதாங்கி பொருத்தும் பணி நடக்கிறது.
ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ராஜகோபுரம் மட்டுமல்ல, உயரமான கருவறை விமானம் உள்ள கோவில்களிலும், இடிதாங்கி கட்டாயம் பொருத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில், கோபுர கலசத்தில் சிறிய வெடிப்பு இருந்தாலும், இடி தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதால், 15 அடி உயரமுள்ள இடிதாங்கி பொருத்தப்படுகிறது. மாவட்டம் வாரியாக கணக்கெடுப்பு நடத்தி, விடுபட்ட கோவில்களில், நவீன இடிதாங்கி பொருத்தப்படுகிறது. கோபுரங்களில் இடிதாங்கி பொருத்துவதால், அதை சுற்றி, 110 மீட்டரில் உள்ள உயரமான கட்டடங்களும், மரங்களும் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.