பதிவு செய்த நாள்
31
ஜன
2023
04:01
தமிழகத்தில் இருக்கும் வைணவ கோயில்களுள் வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலும் ஒன்று. திண்டுக்கல்வில் இருந்து திருச்சி செல்லும் வழியில் 17 கி.மீ., துாரத்தில் வடமதுரை உள்ளது. 17 ஆண்டுகளுக்கு பின்னர் இக்கோயிலில் நாளை பிப்.,1ல் கும்பாபிஷேகம் நடக்கிறது.
திருமறைக்காடு என்ற திருத்தலத்தில் அணையும் நிலையில் இருந்து விளக்கின் திரியை, ஒரு எலி தூண்டிவிட்டு மோட்சம் பெற்றது. பிற்காலத்தில் இறைவன் அருளால் அந்த எலி தான் மகாபலி என்ற அரசனாக பிறந்தான். அதுபோல சாபத்தினால் பாதிக்கப்பட்ட மகரிஷி ஒருவர் தவளை உருக்கொண்டு பெருமாளை நோக்கி தவம் புரிந்து முக்தி பெற்ற ஸ்தலம் தான் வடமதுரை.
கோயில் அமைப்பு: முன்வாயிலில் மூன்று நிலை ராஜ கோபுரமும், பெருமாளுக்கும், தாயாருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. பெருமாள் சீதேவி, பூதேவி சமேத கோலமாக கிழக்கே திருமுக மண்டலத்துடன் காட்சி தருகிறார். பெருமாளுக்கு 6 கால பூஜைகள் தென்கலை சம்பிரதாயப்படி நடக்கிறது. சொர்க்கவாசல், கருடாழ்வார், கம்பத்தடியார், விஷ்வசேனர் சன்னதிகள் மட்டும் இருந்த நிலையில் 2006 கும்பாபிஷேக திருப்பணியில் சக்கரத்தாழ்வார். பக்தஆஞ்சநேயர், லட்சுமிநரசிம்மர், ஸ்ரீஆண்டாள் சன்னதிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. தற்போதைய கும்பாபிஷேக திருப்பணியில் கூடுதல் சிறப்பம்சமாக பெருமாள், சவுந்தரவல்லி தாயார் சன்னதி கர்பகிரகங்களை சுற்றிலும் நீராழி அமைக்கப்பட்டுள்ளது.
நடை திறப்பு: காலையில் 7:00 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலையில் 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும். வைணவ தலங்களில் சுதர்சன வழிபாடு முக்கியமான ஒன்றாகும். சுதர்சன வழிபாட்டின் முக்கிய கோட்பாட்டில் உருவானதே சக்கரத்தாழ்வார் வழிபாடாகும். நினைத்த காரியங்கள் நடக்கவும், தொழில்களில் போட்டி பொறாமையின்றி முன்னேற்றம் ஏற்படவும், சக்கரத்தாழ்வாரை வேண்டிக் கொண்டால் அதன்படி நடக்கும் என்பதும் ஒரு ஐதீகமாகும்.
கும்பாபிஷேகம்: இக்கோயிலில் கடந்த 2006 கும்பாபிஷேகம் நடந்த நிலையில், ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்பதால் அடுத்த கும்பாபிஷேகத்திற்காக கடந்த 2021 நவம்பரில் பாலாலய பூஜையுடன் திருப்பணி துவங்கியது. திருப்பணிக்கு முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் என்.பத்மநாபன், ரியல் எஸ்டேட் பிரமுகரன் என்.ஆர்.ஏ. முரளிராஜன் ஆகியோர் பொறுப்பேற்றனர். பல்வேறு நன்கொடையாளர்களும் பங்கேற்க திருப்பணி முடிவுற்ற நிலையில், நாளை (பிப்.1ல்) கும்பாபிஷேகம் நடத்த அரசு அனுமதி வழங்கியது. ஜன.30ல் யாக சாலை பூஜைகள் துவங்கி நடந்த நிலையில் நாளை காலை 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் கும்பாபிஷே க விழா நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 8:00 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடக்கிறது.