அன்னூர்: குமரன்குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில் தேர்த்திருவிழா துவங்கியது.
அன்னூர் அருகே குமரன் குன்றின் மீது கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 29ம் தேதி இரவு கிராம சாந்தி, பலிபீட பூஜை மற்றும் வேள்வியுடன் துவங்கியது. 30ம் தேதி காலை கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து, வள்ளி, தெய்வானை சமேதரராக கல்யாண சுப்பிரமணிய சுவாமி, கிரிவலம் வந்து அருள் பாலித்தார். நேற்று காலை 10:00 மணிக்கு சுவாமி கிரிவலம் நடந்தது. இதில் தாளத்துறை, பாச்சானூர், அ.குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இதை தொடர்ந்து வரும் 3ம் தேதி வரை தினமும் காலை 10:00 மணிக்கு கல்யாண சுப்பிரமணியசுவாமி கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 4ம் தேதி இரவு 10:00 மணிக்கு அம்மன் அழைப்பு நடக்கிறது, வரும் 5ம் தேதி தைப்பூச நாளன்று அதிகாலை 5:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. காலை 7:30 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை 5:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.