பதிவு செய்த நாள்
02
பிப்
2023
05:02
போத்தனூர்: திண்டுக்கல் மாவட்டம், பழநியிலுள்ள முருகன் கோவிலில் வரும், 5ல் தைப்பூச விழா நடக்கிறது. இதனையொட்டி மாநிலம் முழுவதுமிருந்து பக்தரகள் பாதயாத்திரையாக பழநிக்கு செல்கின்றனர்.
அவ்வகையில், குறிச்சி, சுந்தராபுரம், வெள்ளலூர், சூலூர், தொண்டாமுத்தூர் என மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள், காவடி எடுத்தும், சப்பரத்துடனும் பாதயாத்திரை சென்ற வண்ணம் உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் மாலை முதல் இரவு நேரத்தில் தான் நடக்கின்றனர். அதுவும் வாகன போக்குவரத்து அதிகமுள்ள ’ கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்கின்றனர். இச்சாலையில் பெரும்பாலான இடங்களில் மின்விளக்கு வசதி கிடையாது. இதனால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் நேற்று மாலை சிட்கோ அருகே போத்தனூர் போக்குவரத்து எஸ்.ஐ.செல்வகுமார், ஏட்டு இளங்கோ ஆகியோர் பக்தர்களின் முதுகில் ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் ஒட்டி, அனுப்பினர். பக்தர்கள் கூறுகையில், ’ சாலையில் ஓரத்தில்தான் நாங்கள் நடப்போம். இருப்பினும் சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. இதுபோல் ஸ்டிக்கருடன் செல்லும்போது வாகன ஓட்டிகள் விலகி செல்கின்றனர். ஸ்டிக்கர் ஒட்டி செல்வது பாதயாத்திரை செல்லும் அனைவருக்கும் நல்லது என்றனர்.