* காவடி எடுக்க நாள் குறித்ததில் இருந்து, மூன்று மாதத்திற்கு குடும்பத்தினர் வீட்டிலும் வெளியிலும் துாய்மையை கடைப்பிடித்தல். * காலை, மாலை கோயிலுக்கு செல்லுதல். * திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசத்தை சொல்லுதல். * காவடி எடுத்து வருபவருடன் அதற்குரிய பாடல்களை பாடியாடி கோயிலுக்கு வருதல். * காவடி எடுக்கும் நாளில் அன்னதானம் வழங்குதல். கேட்காமலே கிடைக்கும் இன்பம், துன்பத்தை சமமாக கருதி இயல்பாகவும் எளிமையாகவும் வாழ வேண்டும் என்பதை உணர்த்துவது காவடி. முருகனுக்கு உகந்த நாட்களில் பால், பன்னீர் காவடிகள் என பல காவடிகள் எடுத்து வழிபடுகின்றனர். இந்த சம்பிரதாயம் முதன் முதலில் பழநியில் உருவானது. சூரபத்மன் பரம்பரையை வந்தவர் இடும்பன். தன்னுடைய குலத்தார்கள் நற்கதி பெற வேண்டும் என முருகனிடம் வேண்டினார். ஒரு முறை சிவகிரி, சக்திகிரி என்ற மலைகளைத் தன் இருப்பிடத்திற்கு கொண்டு வர தன் சீடரான இடும்பனிடம் சொன்னார் அகஸ்திய முனிவர். ஒரு கம்பின் இரு முனையில் மலைகள் இரண்டையும் சுமந்து கொண்டு பழநி வந்தார். அப்போது ஓய்வு எடுக்க சுமையை இறக்கி வைத்தார் இடும்பன். சிறிது நேரத்தில் மலையை துாக்க முயற்சித்தும் அவரால் முடியவில்லை. அப்போது ஒரு சிறுவன் சிவகிரி மலை மீது நின்று கொண்டு ‘‘எனக்கு சொந்தமானது’’ என சொன்னார். இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அதில் இடும்பன் விழ்ந்தான். இதை கண்ட அவரது மனைவி சிறுவனிடம் மன்னிப்பு கேட்க, வந்தது முருகன் தான் என்பதை இருவரும் உணர்ந்தனர். தனது கோயிலுக்கு காவலனாக நியமித்தார். ‘‘ உம்மை தரிசிக்க வருபவர்களுக்கு அவர்கள் கேட்காமலே நல்லருள் செய்வேன்’’ என வாக்களித்தார் இடும்பன். வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திர போன்ற நாளில் காவடி எடுக்கின்றனர்.