பதிவு செய்த நாள்
03
பிப்
2023
04:02
ஸ்ரீரங்கம் அரங்கநாதர், தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் தைப்பூசம் நடைபெற்று வருகிறது, தற்போது தாய் மகமாயி வடகாவேரியில் உள்ளார்.
ஸ்ரீரங்கம் கோயில் கருடமண்டபத்தில் இருந்து பட்டுப்புடவை, சந்தனம், மஞ்சள், மாலை, பழங்கள், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் அடங்கிய தட்டுகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு ரங்கா, ரங்கா கோபுரம் வழியாக நாதஸ்வரம் இசைக்க, மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் பக்தர்கள் புடை சூழ, ஸ்ரீரெங்கநாதர் வடக்கு வாசல் வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு வருவார்.சீர்வரிசையை ஸ்ரீரங்கம் கோயில் யானை சுமந்து கொண்டு வருவது வழக்கம். அப்போது அதற்கும் முன்பே சமயபுரத்தில் இருந்து வந்து முன்னதாக, கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி கண்டு ,மறுகரையில் சமயபுரம் மாரியம்மன் பந்தலில் தன் அண்ணன் ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதரிடம் சீர்வரிசை வாங்க காத்திருப்பார். அம்மன் தைப்பூசத்திற்காக கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழி நடை உபயங்கள் பெற்று வட திருக்காவேரியை அடைகிறாள். இன்று இரவு 10 மணிக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கொள்ளிடக்கரையில் தங்கை மாரியம்மனுக்கு சீர் கொடுக்கும் விசேஷ நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து அதிகாலை,1 மணிக்கு சமயபுரம் மாரியம்மனுக்கு கொள்ளிடக்கரையில் மகா அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று வட திருக்காவேரியில் இருந்து அம்மன் சமயபுரம் நோக்கி புறப்படுகிறாள். அதிகாலை அம்மன் வழி நடை உபயங்களுடன் நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வந்து மீண்டும் சமயபுரம் திருக்கோவிலை அடைகிறாள் .அப்போது அம்மனை தரிசித்தால் வேண்டிய வரம் பெறலாம். ஆம்!அம்மன் தன் அண்ணன் ரெங்கநாதரிடம் சீர்வரிசை பெற்ற மகிழ்சியில் இருப்பாள் .அப்போது அன்னையிடம் நாம் வேண்டியதை வெகுவிரைவில் பெறலாம் என்பது உறுதி. உலகின் எந்த ஒரு மூலையில் இருந்து கொண்டும் ,எந்த வேளையில் அன்புடன் நினைத்தாலும் தக்க சமயத்தில் காப்பாள் சமயபுர மாரியம்மன் என்பது பல கோடி பக்தர்களின் வாழ்வில் நடந்த,நடந்து கொண்டு இருக்கின்ற சிலிர்க்கவைக்கும் உண்மை...
ரெங்கநாதரிடமிருந்து சீர்வாங்கும் பாசத்தங்கை நம் தாய்மகமாயி : சீர்வழங்கும் நிகழ்வு பற்றி ஓர் பார்வை திருக்கடையூரில் தன்னை அண்டிய மார்க்கண்டேயரை எமனிடமிருந்து காப்பாற்ற ஈசன் கால சம்ஹார மூர்த்தியாக அவதரித்து எமதர்மனை அழித்தார். இதனால் உலகில் ஜனன மரண நிலையில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. இதனைக்கண்ட எமதர்மனின் சபையில் நோய்களின் அதிபதியாக இருந்த மாயாசூரன் என்பவன் பூவுலகில் இறப்பு நின்றுவிட்ட நிலையில், நோய்களைப் பரப்பி மக்களைத் துன்புறுத்தினான். இதனைக்கண்ட ஈசன் பார்வதி தேவியை பார்க்க ,பார்வதி தேவி தன் அம்சமாக மாரியம்மனை மாயாசூரனை வதம் செய்ய அனுப்பி வைத்தாள். மாரியம்மன் மாயாசூரனையும் அவனது சகோதரர்களையும்(சண்டன், முண்டன்)வதம் செய்து, அவர்கள் தலையை ஒட்டியாணமாக அணிந்து நோய்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றி,ஈசனின் அருளுடன் தனது தமையன் ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் திருக்கோயிலில் முதலில் அமர்ந்து,பின்னாளில் இப்போது உள்ள சமயபுரத்தில் வந்தமர்ந்து நமக்கு அருள்பாலிக்கிறாள்.
இன்றும் சமயபுரம் மாரியம்மனுக்கு தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம் ரெங்கனாதரிடம் இருந்து சீர்வரிசைகள் வருகின்றன.அதுபோல மாசியில் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் போது,சமயபுரத்தில் பூச்சொரிதல் விழா நடைபெறும். அப்போது நம் சமயபுரம் மாரியம்மனுக்கு முதல் பூவாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் இருந்து வரும் பூவே சூடப்படுகிறது. கருவறையில் சமயபுரம் மாரியம்மனின் வலது திருப்பாதம் மாயாசூரனின் தலைமீது பதிந்துள்ளதைக் காணலாம்.சமயபுரம் மாரியம்மன் தனது எட்டுக் கரம்களில் இடப்புறமாக கபாலம், மணி, வில், பாசம், வலப்புறமாக கத்தி, சூலம், அம்பு மற்றும் உடுக்கை ஆகிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளாள். இடதுகாலை மடக்கி வைத்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் மாயாசூரனின் தலைமீது பதித்து ,அமர்ந்து பக்தர்களின் குறைகளை நீக்கி ,வளங்களை அளிக்கிறாள் தாய்மகமாயி, தாயை மஹாவிஷ்ணுவின் யோக மாயை என்பார்கள்.