பதிவு செய்த நாள்
09
பிப்
2023
05:02
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் ரத வீதியில் இலவச கழிப்பறை, குடிநீர் வசதி இல்லாமல், பக்தர்கள் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள், கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடி விட்டு, மாற்று உடையணிந்து சுவாமி தரிசனம் செய்ய சில மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. மேலும் பக்தர்கள் கோயிலில் உள்ள நடராஜர், அனுமான், மகாலட்சுமி சன்னதியில் தரிசித்து, 3ம் பிரகாரம் மற்றும் தூண்களில் வடிவமைத்த கட்டட கலைகளை கண்டு ரசிக்கின்றனர். இதனால் கோயில் இருந்து பக்தர்கள் வெளியில் வர 1:30 மணி முதல் 2 மணி நேரம் வரை ஆகும்.
கழிப்பறை நோ : கோயிலில் இருந்து வெளியேறும் பக்தர்களில் வயது மூத்தோர், பெண்கள் குழந்தைகள், பலரும் இயற்கை உபாதை கழிக்க கோயில் நான்கு ரத வீதியில் இலவச கழிப்பறை வசதி இல்லை. இதனால் பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் அவதிப்பட்டு, கோயில் பிரகாரம் மற்றும் ரதவீதியில் திறந்த வெளியில் செல்லும் அவல நிலை உள்ளது. ரதவீதியில் பெரும்பாலும் தனியார் தங்கும் விடுதிகள், தனியார் மடங்கள் மட்டுமே உள்ளது. இது தவிர கோயிலுக்கு சொந்தமான காலியிடங்கள் கிழக்கு, தெற்கு ரதவீதியில் உள்ளது. ஆனால் கோயில் நிர்வாகம் ரதவீதியில் பக்தர்களுக்காக ஒரு இடத்தில் கூட கழிப்பறை வசதி ஏற்படுத்தாமல், பக்தர்களிடம் காணிக்கை வசூலிப்பதிலே குறிக்கோளாக உள்ளது.
ரூ. 32 கோடி காணிக்கை : இக்கோயிலில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், ஓராண்டு உண்டியல் காணிக்கை ரூ. 25 முதல் 27 கோடி மற்றும் தீர்த்த கட்டணம், சிறப்பு தரிசன கட்டணம் ரூ. 3 முதல் 5 கோடி ஆக மொத்தம் ஓராண்டுக்கு ரூ. 28 முதல் 32 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால் பக்தர்களுக்கு ரத வீதியில் இலவச கழிப்பறை வசதி ஏற்படுத்திட, எந்த அக்கறையும் காட்டாமல் கோயில் நிர்வாகம் அலட்சியமாக உள்ளது.
கிடப்பில் கழிப்பறை : 2019ல் கோயில் நிர்வாகம் சார்பில் வடக்கு ரத வீதியில் ரூ. 80 லட்சத்தில் கழிப்பறை, குளியல் அறைகள் அமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் கடந்த 4 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. இதனால் இக்கழிப்பறை கட்டட கதவுகள், குழாய்கள் பலவீனமாகி சேதமடையும் தருவாயில் உள்ளது. பாதாள சாக்கடை திட்டம் நிறைவேறாமல் உள்ளதால், திடக்கழிவு நீரை வெளியேற்ற முடியாத சூழல் உள்ளதால், கழிப்பறை திறக்கவில்லை என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அதுவரை கழிவுகளை தொட்டியில் சேமித்து, தினமும் தனியார் வாகனம் மூலம் அகற்றிட கோயில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம். இதுகுறித்து ஹிந்து அமைப்பினர் பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இதுகுறித்து ராமேஸ்வரம் சமூக ஆர்வலர் எம்.சுடலை கூறுகையில் : கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ரத வீதியில் கழிப்பறை, குடிநீர் வசதி இன்றி தனியார் விடுதி, வணிக கடைகளை தேடி செல்லும் அவலம் உள்ளது. கோயிலுக்கு பல கோடி ரூபாய் காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு அடிப்படை வசதி கூட ஏற்படுத்தாதது வேதனைக்குரியது. கோயில் நிர்வாகம் கிழக்கு, தெற்கு ரதவீதியில் கழிப்பறை கூடங்கள் அமைத்து கொடுத்தால், அதனை பராமரித்து, பாதுகாக்க ஹிந்து மடங்கள் தயாராக உள்ளது. ஆனால் பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க தமிழக அரசு மற்றும் அதிகாரிகளுக்கு மனசு இல்லை. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மனதிருப்தி இன்றி வேதனையுடன் செல்கின்றனர் என்றார்.