மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2023 11:02
தேவதானப்பட்டி-தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா நாளை கோலாகலமாக துவங்குகிறது.
தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தூரம் மஞ்சளாற்றின் கரையோரம் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட பழமையான மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அம்மனுக்கு விக்ரஹம் கிடையாது. மூடப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. தீபாராதனைக்கு முன்பு தேங்காய் உடைக்கப்படுவதில்லை. வாழைப்பழம் உரிக்கப்படுவதும் இல்லை. இரவு, பகல் அணையாத நெய் விளக்கு எரிகின்றது. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் அம்மனை குல தெய்வமாக நினைத்து பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.
நாளை துவக்கம்: மாசி மகா சிவராத்திரி திருவிழா பிப்., 18 முதல் 25ம் தேதி வரை எட்டு நாட்கள் நடக்க உள்ளது. பக்தர்கள் வசதிக்காக பெரியகுளம், ஆண்டிபட்டி, வத்தலக்குண்டு பகுதிகளில் இருந்து 60 சிறப்பு பஸ்கள் கோயிலுக்கு இயக்கப்படுகிறது. கோயிலில் தற்காலிக பஸ் டெப்போ அமைக்கப்பட்டுள்ளது. பஸ்கள் அரிசிக்கடை வழியாக கோயிலுக்குச் சென்று, அட்டணம்பட்டி பிரிவு வழியாக வெளியேற வேண்டும். 30 தூய்மை பணியாளர்கள், 4மேற்பார்வையாளர்கள் குழு அமைத்து சுழற்சி முறையில் துாய்மை பணி நடைபெறும். திருவிழாவிற்காக நேற்று முதல் மஞ்சளாற்றில் பக்தர்கள் குளிக்க மஞ்சளாறு அணையில் இருந்து வினாடிக்கு 40 கன அடி நீர் திறக்கப்பட்டது. தடையில்லா மின்சாரம், 55 சி.சி.டி.வி., கேமரா, கோயில் அருகே புறக்காவல் நிலையம் அமைத்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். வழக்கமாக காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். திருவிழாவையொட்டி காலை 6:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை நடை திறந்திருக்கும். திருவிழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் தனராஜ் பாண்டியன், கனகராஜ் பாண்டியன் செயல் அலுவலர் வேலுச்சாமி, பேரூராட்சி செயல் அலுவலர் விஜயா செய்து வருகின்றனர்.