பதிவு செய்த நாள்
19
பிப்
2023
10:02
கோவை:கோவை ஈஷா யோகா மையத்தில், ஈஷா மஹா சிவராத்திரி நிகழ்ச்சியை, மஹா யோகா யக்ஞா ஏற்றி, ஜனாதிபதி திரவுபதி முர்மு துவக்கி வைத்தார்.
கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டு தோறும் மஹா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு, 29ம் ஆண்டாக ஈஷா மஹா சிவராத்திரி விழா, ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி முன், நேற்று பிரமாண்டமாக நடந்தது. நேற்று மாலை, 6:00 மணிக்கு, அடியார்க்கும் அடியேன் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. சிறப்பு தலைமை விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார்.
கோவை விருந்தினர் மாளிகையிலிருந்து சாலை மார்க்கமாக பலத்த பாதுகாப்புடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு, நேற்று மாலை 6:14 மணிக்கு, ஈஷா யோகா மையம் வந்தார். அவரை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வரவேற்றார். தொடர்ந்து, ஈஷா யோகா மையத்தில் உள்ள சூரிய குண்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தீபம் ஏற்றி வழிபாடு செய்தார். சூரிய குண்டத்தில் முதல் படியில் இறங்கி, நீரை அள்ளித் தெளித்து வழிபட்டார். பின், ஜனாதிபதியின் இடது கையில் சத்குரு மஞ்சள் நிற, அபய சூத்ரா கயிறை கட்டினார். அதன் பின், பேட்டரி வாகனத்தை சத்குரு இயக்க, இடதுபுற முன்னிருக்கையில் ஜனாதிபதி அமர்ந்தார். பின்னிருக்கைகளில் அமைச்சர் மனோ தங்கராஜ், ஜனாதிபதியின் மகள் அமர்ந்திருந்தனர்.
ஆதியோகி ரதங்கள்: வரும் வழியில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆதி யோகி ரதங்கள், 63 நாயன்மார்களின் ரதங்கள் குறித்து, ஜனாதிபதிக்கு சத்குரு விளக்கினார். லிங்க பைரவி தேவியின் சன்னிதியின் முன்புறம் உள்ள நந்தி சன்னிதிக்கு சென்றனர். அங்கு, ஜனாதிபதி நந்திக்கு தாமரை மலர்கள் துாவி வழிபாடு செய்தார். தொடர்ந்து, ஜனாதிபதி, கவர்னர் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தாக க்ரியா: லிங்க பைரவி தேவி சன்னிதிக்கு சென்று அங்குள்ள ஆலமரத்துக்கு, ஜனாதிபதி தாக க்ரியா எனும் தீர்த்தம் ஊற்றும் வேண்டுதல் செய்து, ஆலமரத்திற்கு மாலை அணிவித்து வழிபட்டார். ஜனாதிபதியைத் தொடர்ந்து, கவர்னர் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜும் அதேபோல் வழிபட்டனர். லிங்க பைரவி தேவியின் சன்னிதியில் உள்ள திரிசூலத்திற்கு, ஜனாதிபதி நெய் தீபம் ஏற்றி வழிபட்டார். பிறகு தியான லிங்க வளாகத்திலிருந்து புறப்பட்டு, ஆதியோகி முன் மஹா சிவராத்திரி நடக்கும் நிகழ்ச்சி மேடைக்கு ஜனாதிபதி, சத்குரு, கவர்னர் ரவி, அமைச்சர் உள்ளிட்டோர் 7:10 மணிக்கு வந்தனர். மேடை அருகே இருந்த மகிழம் மரத்துக்கு வழிபாடு நடந்தது. ஆதியோகி முன்புறம் உள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு கையால் தீர்த்தம் ஊற்றி, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து, ஜனாதிபதி வழிபட்டார். ஜனாதிபதி மஹா யோகா யக்னா தீபத்தை ஏற்றிய பிறகு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி துவங்கியது.
கிறங்கடித்த இசை; பார்வையாளர்கள் பரவசம்: கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஈஷாவில் மகா சிவராத்திரி பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
l லிங்க பைரவி தேவி மகா யாத்திரையுடன் ஈஷாவில் மகா சிவராத்திரி துவங்கியது. 1.2 லட்சம் பேருக்கு இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவசர கால பயன்பாட்டுக்காக ஏழு வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன
l பார்வையாளர்கள் அனைவருக்கும் தீபாராதனை கரண்டி வழங்கப்பட்டு, அனைவரும் ஆரத்தி எடுத்தனர். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும், ஆதியோகிமுன் வைத்து பூஜிக்கப்பட்டு, சக்தியூட்டப்பட்ட ஒரு ருத்ராட்சம், விபூதி, அபயசூத்ரா கயிறு, ஆதியோகி புகைப்படம் அடங்கிய ஒரு பிரசாத கவர் வழங்கப்பட்டது
l பார்வையாளர்களுக்கு உதவ அனைத்துப் பகுதிகளிலும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. நாள் முழுதும், விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
l பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை திரையில் காண்பிக்கும்போதெல்லாம், பார்வையாளர்கள் தரப்பில் இருந்து உற்சாகக் கூக்குரல் எழும்பிய வண்ணம் இருந்தது. டி.ஜி.பி., சைலேந்திரபாபு,புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ண சாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
l சவுண்ட்ஸ் ஆப் ஈஷா மாணவர்கள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர்கள், இசையால் பார்வையாளர்களைக் கிறங்கடித்தனர்.தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகர் வேல்முருகன், ராஜஸ்தானி நாட்டுப்புறக் கலைஞர் மாமேகான், பிரபல சிதார் இசைக்கலைஞர் நிலத்ரிகுமார், தெலுங்கு பின்னணி பாடகர் ராம் மிரியாலா உள்ளிட்டோரின் இசை, பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.