பதிவு செய்த நாள்
20
பிப்
2023
07:02
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி தேர் திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாள் விழாவாக நேற்று மயானகொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்க கவச அலங்காரம் செய்தனர். காலை 10.30 மணிக்கு கோவிலில் வடக்கு வாசிலில் இருந்து அம்மன் சிம்ம வாகனத்தில் மயான காளியாக விஸ்வரூப கோலத்தில் மயான புறப்பட்டு வந்தார். அம்மன் மயானம் நோக்கி வந்த போது வழி நெடுகிலும் இருந்த பக்தர்கள் நாணயங்கள், காய்கனிகள், உணவு பொருட்கள், தானியங்கள், கோழி ஆகியவற்றை வாரி இரைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். காலை 10.45 மணிக்கு அங்காளம்மன் மயானத்திற்கு வந்ததும், அங்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி குவித்து வைத்திருந்த உணவு பொருட்களை பூசாரிகள் கொள்ளை விட்டனர். அப்போது அங்காளம்மன் பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. இன்றும், நாளையும் அம்மன் தங்க நிற பல்லக்கில் ஊர்வலமும், 22ம் தேதி மாலை 4.30 மணிக்கு ஐந்தாம் நாள் விழாவாக தீமிதி விழாவும், 24ம் தேதி முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல் பகல் 1.30 மணிக்கு நடக்க உள்ளது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், சரவணன், வடிவேல், மேலாளர் மணி, கண்காணிப்பாளர் வேலு மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். ஏ.டி.எஸ்.பி., கோவிந்தராஜ் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்டடனர்.
குவிந்த பக்தர்கள்: நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சென்னை, விழுப்புரம், வேலுார் பகுதியில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர். இது மட்டுமின்றி பக்தர்கள் நூற்றுக்கணக்கான கார், வேன்களில் வந்திருந்தனர்.