பதிவு செய்த நாள்
27
பிப்
2023
02:02
தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே உள்ள, குரு ஸ்தலமாகிய திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், தமிழ் மொழிக்காக, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, 20 பேர் நேற்று சிறப்பு யாகம் நடத்தினர்.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, தகாஈஹி எனப்படும் பாலகும்பமுனி என்பவரது தலைமையில், எட்டு பெண்கள் உட்பட, 20 பேர், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், தமிழ் மொழி சிறக்க வேண்டும் என, நேற்று ருத்ர யாகம் நடத்தினர். கோவில் சிவாச்சாரியார் சுவாமிநாதன் தலைமையில் யாகம் நடந்தது. பின், புனித நீர் அடங்கிய கலசங்களை, மங்கள வாத்தியம் முழங்க, குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
இது குறித்து, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் கூறியதாவது: உலகில் மூத்த மொழியாக உள்ள தமிழ் மொழியில் இருந்து தான், ஜப்பான் மொழி தோன்றியதாக ஜப்பானிய நாட்டவர்கள் கருதுகின்றனர். தமிழ் மொழியின் ஓசையும், ஜப்பான் மொழியின் ஓசையும் ஒன்றாக உள்ளதாக கூறுகின்றனர். நான், ஜப்பானில் உள்ள ஒதஹோமா பல்கலையிலும், ஆசியன் நுாலகத்திலும், 35 ஆண்டுகளாக தமிழ் மொழியை கற்றுக் கொடுக்கிறேன். என்னிடம் ஏராளமானோர் தமிழ் கற்கின்றனர். தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரத்தை கற்க ஆர்வம் காட்டும் ஜப்பானியர்கள், ஆன்மிக தேடலிலும் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ் மொழியின் சிறப்பை உலகம் முழுதும் எடுத்துச் செல்ல வேண்டும், ஜப்பானியர்கள் அதிகளவில் தமிழ் மொழியை கற்க வேண்டும். உலகம் அமைதியுடன், அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என, தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகள், சிவாலயங்களில் வழிபட்டு, சிறப்பு யாகங்களையும் நடத்தி வருகின்றனர். இன்று, நவக்கிரஹ கோவில்களுக்கு சென்று, அங்கும் சிறப்பு யாகங்கள் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.