மயிலாடுதுறை; திருவெண்காடு கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரர்சுவாமி கோயில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இக்கோயில் காசிக்கு இணையான 6 கோயில்களில் முதன்மையான கோயிலாக விளங்குகிறது. இங்கு உள்ள மூன்று தீர்த்தங்களிலும் நீராடி சுவாமியை வழிபாடு செய்தால் 7 ஜென்ம பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக புனிதநீர் நிரப்பபட்ட சங்குகள் நெல்லின் மீது வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடு மற்றும் தீபாராதனை செய்து தொடர்ந்து சங்குகளில் நிரப்பபட்ட புனித நீரால் சுவேதாரண்யேஸ்வரர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கண்ணாங்குடி ராமகிருஷ்ணன் குடும்பத்தார், இந்து அறநிலை துறை அலுவலர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.