பதிவு செய்த நாள்
27
பிப்
2023
04:02
திருச்செந்துார்: திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவில், நேற்று சுவாமி சிங்ககேடய சப்பரத்தில் எழுந்தருளி, அருள்பாலித்தார். நாளை இரவு, தங்க முத்துக்கிடா வாகனத்தில் எழுந்தருளுகிறார். திருச்செந்துார் , சுப்பிரமணிய சுவாமி கோயிலில் , இந்த ஆண்டு மாசித் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. திருவிழாவில், தினசரி காலை, மாலை நேரங்களில் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இரண்டாம் திரு நாளான நேற்று , காலை சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்ககேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளினர். தொடர்ந்து இரவு சுவாமி சிங்க கேடய சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடயசப்பரத்திலும், எட்டு வீதியும் உலா வந்து அருள்பாலித்தனர்.
இன்று தங்க முத்துக்கிடா வாகனத்தில்வீதிஉலா: மூன்றாம் திருநாளான இன்று, காலை சுவாமி பூங்கோவில் சப்பரத்திலும், அம்பாள் கேடய சப்பரத்திலும் எழுந்தருள்கின்றனர். மாலைக் கோயிலில் இருந்து சுவாமி குமர விடங்கப் பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிளன்றனர். 5ம் திரு நாளான மார்ச் 1ம் தி இரவு 7:30 மணிக்கு மேலக்கோயிலில், திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா வருகின்றனர். திருவிழாவின் சிகரநிகழ்ச்சியான தேரோட்டம், மார்ச் 6ம் தேதி நடைபெறுகிறது. அன்றுகாலை 6:00 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் கும்ப லக்கனத்தில் தேரோட்டம் துவங்குகிறது. மார்ச் 7ம் தேதி 11ம் திருவிழாவை முன்னிட்டு, இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது.