பதிவு செய்த நாள்
27
பிப்
2023
04:02
அச்சிறுபாக்கம்,: அச்சிறுபாக்கம் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில், நேற்று ருத்ராட்சம் செலுத்தும் இருமுடி விழா நடைபெற்றது.
திரிபுராசூரர்களை சிவபெருமான் வதம் செய்யச் சென்றபோது, எம்பெருமானின் கண்களில் இருந்து விழுந்த துளிகள் ருத்ராட்ச மரம் ஆகி, ருத்ராட்சம் உருவானதாக வரலாறு தெரிவிக்கிறது. இதன் காரணமாக, 540 சிவனடியார்கள், 540 ருத்ராட்சை இருமுடிகளில், 58 ஆயிரம் ருத்ராட்சங்களை, சிரசில் ஏந்தி, அச்சு முறி விநாயகர் ஆலயத்தில் இருந்து, கைலாய வாத்தியம் முழங்க, நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து, ஆட்சீஸ்வரர் திருக்கோவிலை வந்தடைந்தனர். அதன் பின், ஆட்சீஸ்வரருக்கு ருத்ராட்ச அபிஷேகம் நடைபெற்றது. மேலும், கோவில் வளாகத்தில், தமிழகத்திலேயே முதன்முறையாக ருத்ராட்ச உண்டியல் வைக்கப்பட்டது. இந்நிகழ்வை, ஆட்சீஸ்வரர் கோவில் சிவனடியார் திருக்கூட்டம் நடத்தியது. இதில், ஏராளமான சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.