செம்பை பார்த்தசாரதி கோவில் ஏகாதசி உற்சவம்: கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2023 08:02
பாலக்காடு: கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோவில் ஏகாதசி உற்ஸவத்திற்கு கொடியேறினர். உற்சவத்தையொட்டி நடக்கும் 109ம் ஆண்டு செம்பை சங்கீத உற்சவம் நாளை (1ம் தேதி) துவங்கி மார்ச் 3 வரை நடக்கிறது. செம்பை குடும்பத்தினர் நடத்தும் இந்த விழா பிரசித்தி பெற்றது. நேற்று தந்திரி அண்டலாடி பரமேஸ்வரன் நம்பூதிரிபாடின் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. நாளை மாலை 6.00 மணிக்கு துவங்கும் சங்கீத உற்சவத்தில் கர்நாடக இசைக்கலைஞர் டி.வி; கோபாலகிருஷ்ணன், சுகுமாரி நரேந்திர மேனன் ஆகியோரின் கச்சேரி, நடக்கிறது. 2ம் தேதி மாலை 6.30 மணிக்கு பெங்களூரு ஹெராம்ப், ஹேமந்த் ஆகியோரின் புல்லாங்குழல் கச்சேரி நடக்கிறது.
சங்கீத உற்சவத்தின் சிறப்பு நாளான மார்ச் 3ம் தேதி காலை 8.30 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை, மண்ணூர் ராஜகுமாரன் உண்ணி தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனை, இளம் கலைஞர்களின் சங்கீத ஆராதனை நடக்கிறது. மாலை 6 க்கு சென்னை ராமநாதனின் சாக்ஸபோன் கச்சேரி நடக்கிறது. 7.00 மணிக்கு பிரகாஷ் உள்ளியேரியின் ஹார்மோனியம், இரவு 8.00 மணிக்கு விஜய் ஜேசுசுதாஸ் கச்சேரிகள் நடக்கும். இரவு 9.00 மணிக்கு கர்நாடக இசைக் கலைஞர் ஜேசுதாஸ் அமேரிக்காவில் இருந்து ஆன்லைன் வாயிலாக சங்கீதா ஆராதனை நடத்துகிறார். தொடர்ந்து 11.00 மணிக்கு ஜயனின் சங்கீத கச்சேரி நடக்கின்றன. மார்ச் 4ம் தேதி ஏகாதசி உற்சவம் மூலவரின் ஆறாட்டு நிகழ்ச்சிகளுடன் நிறைவடைகிறது.