சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2023 06:02
தியாகதுருகம்: சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.
தியாகதுருகம் அடுத்த சித்தலூர் மணிமுக்தா ஆற்றங்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் மாசித் திருவிழா கடந்த 18 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் இரவு உற்சவர் அம்மன் சர்வ அலங்காரத்தில் மாட வீதிகள் வழியே ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. கடந்த 26 ம் தேதி மயான கொள்ளை திருவிழா நடந்தது. இன்று தேர் திருவிழாவை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், கருவறையில் உள்ள பிரம்மாண்ட புற்றுக்கு மலர் அலங்காரமும் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 4.45 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மனை தேரில் வைத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், உதவி ஆணையர் சிவாகரன், செயல் அலுவலர் சங்கர், மண்டல ஆய்வாளர் செல்வராஜ், தர்மகர்த்தாக்கள் பூசாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். எஸ்.பி., மோகன்ராஜ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் வசதிக்காக கள்ளக்குறிச்சி, தியாகதுருகத்தில் இருந்து கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.