பதிவு செய்த நாள்
28
பிப்
2023
10:02
திருப்பூர்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் நேற்று, மூன்று அடி உயரமுள்ள சக்திவேல் வைத்து, சிறப்பு வழிபாடு நடந்தது.
திருப்பூர் மாவட்டம், சிவன்மலையில் உள்ள பிரசித்திபெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவுப்பெட்டி உள்ளது. இதில் முருகப்பெருமான், பக்தர்கள் கனவில் தோன்றி, உணர்த்தும் பொருளை வைத்து பூஜை நடத்தப்படுகிறது. கடந்த மாதம் 14ம் தேதி, பொங்கல் பண்டிகையின்போது, நெற்கதிர் வைத்து பூஜை நடந்தது.சேலம் பக்தர் கனவில் தோன்றியபடி நேற்று, மூன்று அடி உயர பித்தளையிலான சக்தி வேல் வைத்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. சிவாச்சாரியார்கள் கூறுகையில், 2019ல், வெள்ளிவேல் வைத்தும், கடந்த அக்., மாதம், செம்பு உலோகத்தில் செய்த வேல் வைத்தும் வழிபாடு நடந்தது. ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள், சமுதாயத்தில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். முருகனின் ஆயுதமான சக்திவேல், தீமையை அளிக்கும் வல்லமை பெற்றது; பார்வதி தேவியின் அம்சமாகவும் விளங்குகிறது. இதுவரை இல்லாத வகையில், மூன்று அடி உயர வேல் வைக்கப்பட்டுள்ளது. பெட்டிக்குள் வைக்க முடியாததால் பெட்டிக்கு வெளியே கட்டி வைக்கப்பட்டுள்ளது. இது, நாடு தழுவிய அல்லது உலக அளவிலான பிரதிபலிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதர்ம நோய்கள், போர் சூழல், பேரிடர் விலகி அமைதி நிலவும் என்றனர்.