பதிவு செய்த நாள்
28
பிப்
2023
08:02
திருவொற்றியூர்: பழமை வாய்ந்த திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ திருவிழா நாட்களில், உற்சவ சந்திரசேகரர் - திரிபுர சுந்தரி தாயார் சூரிய, சந்திர பிரபை, சிம்மம், நாகம், பூதம், ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி, புஷ்ப பல்லக்கு, இந்திர விமானம், யானை, குதிரை வாகனங்களில் எழுந்தருளி, மாடவீதி உலா வருவார். இரண்டாம் நாளான நேற்று உற்சவர் சந்திரசேகரர், சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான சந்திரசேகரர் திருத்தேரோட்டம், 4ம் தேதியும்; கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம், 6ம் தேதியும் நடைபெற உள்ளன. வரும், 7ம் தேதி, தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கம்; 8ம் தேதி இரவு, தியாகராஜர் 18 திருநடனம், பந்தம் பறி உற்சவத்துடன், திருவிழா நிறைவு பெறும். சென்னை சுற்றுவட்டாரத்தில் அதிக மக்கள் கூடும் திருவிழா என்பதால், கோவில் உதவி கமிஷனர் பாஸ்கரன் தலைமையிலான ஊழியர்கள், விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.