திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் தீப வழிபாடு துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2023 05:03
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உத்ஸவத்தை முன்னிட்டு குளக்கரையில் பெண்கள் தீப வழிபாட்டை துவக்கியுள்ளனர்.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தெப்ப உத்ஸவம் பிப்.26 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது. இவ்விழாவில் பெண்கள் தீபம் ஏற்றி நேர்த்திக் கடன் நிறைவேற்றுவது வழக்கம். இந்த ஆண்டு முதல் நாள் முதல் தீப வழிபாடு துவங்கி விட்டது. காலை, மாலை இருவேளைகளிலும் தெப்பக்குள தெற்கு கரையில் தீபம் ஏற்றி பெருமாளை வேண்டுகின்றனர். நாளை இரவு தங்க சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்கிறார். மார்ச் 4 ல் சூர்ணாபிேஷகம், தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மார்ச் 6 காலையில் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் சுவாமி தெப்பக்குளம் எழுந்தருளலும், தெப்பம் முட்டுத்தள்ளுதலும் நடைபெறும். இரவில் தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மார்ச் 7 ல் காலை 10:46 மணிக்கு பகல் தெப்பமும், இரவு 7:30 மணிக்கு மேல் இரவு தெப்பமும் நடைபெறும். மறுநாள் காலை சக்கரத்தாழ்வாருக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும், இரவில் சுவாமி ஆஸ்தானத்திற்கு எழந்தருளலுடன் நிறைவடையும். தெப்பக்குள கிழக்கு படித்துரை மண்டபத்திற்கு முன்பாக தற்போது டைல்ஸ் பதிக்கும் பணி, விளக்கேற்ற தடுப்புகள், மின் விளக்கு பொருத்தும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.