2ம் கட்டமாக காசி யாத்திரை : ராமேஸ்வரத்தில் இருந்து 67 பக்தர்கள் சென்றனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2023 04:03
ராமேஸ்வரம்: தமிழக அரசு சார்பில் 2ம் கட்டமாக ராமேஸ்வரத்தில் இருந்து 67 பக்தர்கள் காசிக்கு புனித யாத்திரை பயணம் சென்றனர்.
தமிழக அரசு ரூ. 50 லட்சம் செலவில் 200 பக்தர்களை ராமேஸ்வரம் டு காசிக்கு இலவச புனித யாத்திரை பயணம் அழைத்து செல்ல முடிவு செய்து பிப்., 22ல் ராமேஸ்வரத்தில் இருந்து 66 பக்தர்கள் புறப்பட்டு காசிக்கு சுவாமி தரிசனம் முடித்து நேற்று காலை ராமேஸ்வரம் வந்தனர். இதனை தொடர்ந்து 2ம் கட்டமாக திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 67 பக்தர்கள் நேற்று ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். இவர்கள் நேற்று மாலை ராமேஸ்வரத்தில் இருந்து பஸ்ஸில் புறப்பட்டு விழுப்புரம் சென்றனர். இன்று (பிப்., 2) காலை 10:20 மணிக்கு ரயிலில் காசிக்கு புறப்பட்டு செல்ல உள்ளனர். காசியில் சுவாமி தரிசனம் செய்து பிப்., 5ல் அங்கிருந்து புறப்பட்டு மார்ச் 7ல் ராமேஸ்வரம் வந்து சேர்வார்கள். இவர்களை ராமேஸ்வரம் கோயில் துணை ஆணையர் மாரியப்பன் வழியனுப்பி வைத்தார். இதில் பேஸ்கார்கள் கமலநாதன், முனியசாமி கோயில் ஊழியர்கள் பலர் இருந்தனர்.