பதிவு செய்த நாள்
04
மார்
2023
01:03
உத்திரமேரூர்: களியாம்பூண்டி ஏரியில், கிணற்று துார்வாரும் பணியின் போது, நேற்று பெண் தெய்வ சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது களியாம்பூண்டி கிராமம். இக்கிராமத்தில், மகளிர் சுய உதவிக்குழுவினர், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு தீவனம் வளர்த்து வருவாய் ஈட்டும் பணி மேற்கொள்கின்றனர். இதற்காக, களியாம்பூண்டி ஏரி அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தீவனப் பயிர் பாசனத்திற்காக, அப்பகுதி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் ஏற்கனவே தோண்டப்பட்டுள்ள கிணற்றில் நேற்று துார்வாரும் பணி நடந்தது. அப்போது, சுமார் 4 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட பெண் தெய்வ கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலை குறித்த தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிலையை மீட்டு, உத்திரமேரூர் கருவூலத்திற்கு எடுத்து சென்றனர். இச்சிலை குறித்து, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதவன் கூறியதாவது: களியாம்பூண்டியில் கண்டெடுக்கப்பட்டு உள்ள பெண் தெய்வ சிலை, மிகப் பழமையானதாக தெரியவில்லை. சமீப காலத்தை சேர்ந்ததாக அறிய முடிகிறது. பெண் தெய்வம் ஒன்று பீடத்தின் மீது, வலது காலை மடக்கியும், இடது காலை தொங்க விட்டும் அமர்ந்துள்ளதாக உள்ளது. தலையில் கிரீடம், காது மற்றும் கழுத்தில் அணிகலன்கள், மார்பில் கச்சை, கைவலை மற்றும் அழகிய ஆடையில் அலங்காரத்தோடு காணப்படுகிறது. வலது கையில் தாமரை மலர் போன்ற ஒன்றை ஏந்தியும், இடக்கை தொடை மீது வைத்து, கட்டை விரல் முனையும், ஆள்காட்டி விரல் முனையும் இணைந்து, மற்ற மூன்று விரல்கள் அருள்பாலிப்பது போலவும் உள்ளது. சிலை அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. முழுமையான ஆய்வுக்கு பிறகுதான் இச்சிலை குறித்த முழு விவரம் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.