திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோயிலில் மாசிமக தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2023 03:03
மயிலாடுதுறை: திருமணஞ்சேரி கோவில் மாசி மக தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரி கிராமத்தில் கோகிலாம்பாள் சமைத உத்வாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி, அம்பாளை தரிசித்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இதனால் திருமணம் கைகூட வேண்டி நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டு செல்வதும், திருமணம் கைகூடியதும் தம்பதி சமேதராய் கோவிலுக்கு வந்து பூஜைகள் செய்து செல்வதும் வழக்கம். சிறப்புமிக்க இக்கோவிலின் மாசி மக பெருவிழா கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வுகளான தெருவடைச்சான், தேர் திருவிழா நடந்து முடிந்தது. தொடர்ந்து இன்று காலை நடராஜர் ருத்ரபார தீர்த்தமும், மதியம் கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பட்டு கோவிலை வலம் வந்து விக்ரமன் ஆற்றங்கரையில் எழுந்தருளியினர். அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத, மங்கள வாத்தியம் இசைக்க ஆஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு ஆஸ்திரதேவர் காவிரியில் நீராட அங்கு திரண்டு இருந்த திரளான பக்தர்களும் காவிரியில் புனித நீராட மாசிமக தீர்த்தவாரி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நிர்மலா தேவி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.