பதிவு செய்த நாள்
08
மார்
2023
10:03
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே மானம்பாடியில் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட நாகநாதசுவாமி கோவிலில், மாதிரி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத்தினர் அறிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே விக்கிரவாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மானம்பாடி.இங்கு ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் (கி.பி., 1012-1044) கட்டப்பட்டு, திருப்பணி செய்யப்பட்டதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ள சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சௌந்தரநாயகி அம்மன் சமேத நாகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை, அகலப்படுவதற்காக, அளவீடு செய்யும் போது, கோவில் சிதையும் அபாயம் ஏற்பட்டது. அப்போது பலரும் எதிர்ப்பு எழுந்தது. இதனால், மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில், இக்கோவிலில் ராஜேந்திர சோழனின் புடைப்புச் சிற்பமும், தமிழ்க்கூத்து என்கிற பழமையான கூத்துக் கலைக்குக் கல்வெட்டு ஆதாரமாக உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு அறநிலையத்துறையால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திருப்பணிக்காக பாலாலாயம் செய்து, பழைய கோவிலை தரைமட்டமாக பிரித்து எடுக்கப்பட்டது. இதையடுத்து 10 ஆண்டுகள் கடந்த நிலையில்,இதுவரை கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக அதிகாரிகள் எந்தவித பணிகளையும் துவங்காமல் இருப்பதால் கோவில் புதர் மண்டியுள்ளது. இது குறித்து ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் கூறியதாவது; சோழர் காலத்தில், இவ்வூர், வணிக தலமாக விளங்கியது. "நாகன்பாடி என்று அழைக்கப்பட்ட இவ்வூர், பிற்காலத்தில், "மானம்பாடி என, மருவியது. இக்கோவில்,கற்கோவிலாக விளங்குகிறது. அனைத்து தெய்வ வடிவங்கள் அழகுடன் அமைந்துள்ளன. வரலாற்றுச் சிறப்பு மிக்க, இக்கோவிலை பாதுகாத்து, வழிபாடு மேற்கொள்ள வேண்டியது, அனைவரின் கடமை. இந்நிலையில் 10 ஆண்டுகளாக கோவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அனைத்து அதிகாரிகள், பல்வேறு வகையான போராட்டங்களை முன் நிறுத்தியும் நடவடிக்கை இல்லை. எனவே, கோவில் முன்பு, மிகப்பெரிய அளவில், கோவில் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, முறையாக ஹோமம் நடத்தி மாதிரி கும்பாபிஷேகம் நடத்தும் போராட்டம் நடத்த உள்ளோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.