பதிவு செய்த நாள்
08
மார்
2023
09:03
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா 11ம் நாளான நேற்று யாதவர் ண்டகப்படியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது,
தொடர்ந்து இரவு நடந்த தெப்பத்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா கடந்த பிப்., 25ம் தேதி
கொடியேற்றுத்துடன் துவங்கியது. திருவிழாவில் தினசரி காலை, மாலை சுவாமியும், அம்பாளும் தனித்தனி சப்பரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்து அருள்பாலித்தனர். திருவிழா தேரோட்டத்தை தொடர்ந்து நேற்று திருவிழா கொடியேற்றிய சிவாச்சார்யார்க்கு மரியாதை செய்யும் ஆச்சார்ய உற்சவம் நடந்தது. 11ம் திருநாளான நேற்று மாலை மேலக்கோயிலில் இருந்து சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள யாதவர் மண்டபடிக்கு வந்து சேர்ந்தனர். அங்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து இரவு சுவாமியும், அம்பாளும் புஷ்பபல்லக்கில் எழுந்து வெளிவீதி வழியாக தெப்பக்குளத்தில் உள்ள திருநெல்வேலி நகரத்தார் மண்டகப்படி வந்து சேர்ந்தனர். அங்கு அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து நள்ளிரவு சுவாமியும் அம்பாளும் தெப்பத்தேரில் எழுந்தருளி தெப்பத்தில் 11 முறைசுற்றி அருள்பாலித்த தெப்பஉற்சவம் நடந்தது. கோயில் அலுவலர்கள் மற்றும் நகரத்தார் மண்டகப்படிதாரர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்குழுத்தலைவர்அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.