பதிவு செய்த நாள்
08
மார்
2023
11:03
மணவாளக்குறிச்சி: பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி கொடை விழா சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு விழா 5ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழக அமைச்சர்கள் சேகர் பாபு, மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாவட்ட எஸ்பி ஹரிஹரன் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
10 நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் பாரம்பரிய முறைப்படி சிறப்பு வழிபாட்டு பூஜைகளும், சமய சொற்பொழிவு, சமய இன்னிசை விருந்து போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். மாசி கொடை விழாவின் மூன்றாம் நாளான நேற்று வெள்ளிப்பல்லக்கில் அம்மன் பவனி நடந்தது. இன்று நான்காம் நாளான இன்று (8ம் தேதி) பகல்11.30 மணிக்கு மேற்கு நெய்யூர் ஊரம்மன் கோயிலில் இருந்து களப பவனி, மாலை 6.15க்கு கொத்தனார்- விளை ஊர்மக்கள் சார்பில் அம்மனுக்கு சந்தன காப்பு, ஐந்தாம் நாளான நாளை மாலை 4 மணிக்கு மணவாள குறிச்சி ஐ.ஆர்.இ., நிறுவனத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதம் மற்றும் தேர்மாலையுடன் யானை மீது சந்தன குடம் பவனி நடக்கிறது. மாசி கொடை விழாவின் முக்கிய நிகழ்வான வலியப்படுக்கை 10ம் தேதியும், தொடர்ந்து மகா ஒடுக்கு பூஜை நடைபெறும். நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து இந்த கொடை விழாவினை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. விழாவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சிறப்பு பஸ் வசதிகள், சுகாதார வசதிகள், மின்சார வசதி, பக்தர்கள் நீராட ஏ.வி.எம். சானலில் படித்தளம் , தெப்பக்குளத்தில் சுத்தமான நீர் நிறைத்தல், கோவில் சுற்றுப்புறத் தூய்மை பணிகள், பாதுகாப்பான தற்காலிக கடைகள் என அனைத்தும் கலெக்டரின் அறிவுறுத்தல்படி இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டுள்ளது.