பதிவு செய்த நாள்
08
மார்
2023
11:03
தமிழக கோவில்களில் தமிழில் குடமுழுக்கு பெரு விழா நடத்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, ஹிந்து அறநிலைய துறை தீவிரமாக களம் இறங்கியுள்ளது. தமிழகம் முழுதும் மண்டல வாரியாக கருத்து கேட்பு கூட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, துாத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மண்டலத்தை இணைத்து, பாளையங்கோட்டையில் நடந்த கருத்து கேட்பு கூட்டம் வாக்குவாதத்தில் முடிந்தது.
விதிகள்: இது குறித்து, தமிழக ஆலய வழிபடுவோர் சங்க நிறுவனர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது: பாரம்பரியமாக ஆகம விதிகளை பின்பற்றி நடத்தப்படும் கோவில்களில், ஆகம விதிகளை மீறி எதையும் செய்ய முடியாது.இதற்காகவே, 1991ல் மத்திய அரசு சட்டம் உருவாக்கப்பட்டது. வழிபாட்டுத் தலங்கள் சட்டப்பபடி, 1947 ஆக., 15க்கு முன் கோவில்களில் எந்த பழக்க, வழக்கங்கள் கடைபிடிக்கப்பட்டதோ, அதை மாற்றக் கூடாது. மீறி மாற்றினால், அது மத அடையாளங்களை சிதைப்பது போன்றது. அயோத்தி ராமர் கோவில் தொடர்பான வழக்கை விசாரித்த, அரசிய சாசன அமர்வில் இருந்த ஐந்து நீதிபதிகளும், தீர்ப்பில் ஒரு பகுதியில், இதை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.அதேபோல, மாநில அரசின் கோவில் நுழைவு சட்டம் உள்ளது. அதில், கோவில்களில் பின்பற்றப்பட வேண்டிய பல்வேறு விதிகள் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன. தஞ்சாவூர் பெரிய கோவிலை மகுட ஆகமத்தை அடிப்படையாக வைத்துதான் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. மகுட ஆகம விதிகள் அடிப்படையில் தான் கோவில் பூஜை, திருவிழாக்கள் நடக்கும்.
கடந்த 2020ல், இந்த கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது, மகுட ஆகம அடிப்படையில்தான்.ஆகம விதிகளை பின்பற்றிதான் கோவில்களில் குடமுழுக்கு நடத்த வேண்டுமா என்பது குறித்து, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் போடப்பட்டன. அதில் முக்கியமானது, ஷேசம்மாள் என்பவர் தொடுத்த வழக்கு. அந்த வழக்கை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. ஐந்து நீதிபதிகளும் ஒருமனதாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.எந்தெந்த கோவில்களில் சிவாச்சாரியார்கள் பூஜை செய்கின்றனரோ, அவர்களே அப்பணியில் தொடர வேண்டும். அதேபோல, பட்டாச்சாரியார்கள் உள்ள கோவில்களில், அவர்கள் பணிகளை அவர்களே செய்ய வேண்டும். முழுமையாக ஆகம விதிகளைப் பின்பற்றிதான் கோவில்கள் இயங்க வேண்டும் என, தீர்ப்பில் கூறி உள்ளனர்.
வழக்கு: இவற்றை மீறி, தமிழ் வழியில் குடமுழுக்கு பெருவிழாவை நடத்துவோம் என்று, தமிழக அரசு கூறுவது நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது. தமிழில் குடமுழுக்கு விழா நடத்த வேண்டும் என்று கூறி, உயர் நீதிமன்றத்தில் பக்தர் ஒரு வழக்கு போட்டார்.அந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்குள், நீதிபதி கிருபாகரன் ஓய்வு பெற்று விட்டார். இரு மாதங்கள் கழித்து, வழக்கில் தீர்ப்பு வந்தது. அப்போது, தமிழின் அருமை பெருமைகளை குறிப்பிட்ட நீதிபதி, தமிழிலும் குடமுழுக்கு நடத்தலாம் என உத்தரவிட்டிருந்தார்.இதை வைத்தே, அறநிலைய துறை, தமிழில் குடமுழுக்கு நடத்த களம் இறங்கி விட்டது.
மந்திரம் அல்ல: முதல் கட்டமாக, பழநி கோவில் குடமுழுக்கு விழாவில், தமிழிலும் நடத்தியது போல ஓதுவார் ஒருவரை கூடவே வைத்து கொண்டனர். தமிழில் சோத்திரங்கள், சாத்திரங்கள் உண்டு. ஆனால், மந்திரங்கள் கிடையாது. உடனே, திருமந்திரம் இருக்கிறதே என்பர். அது மந்திரம் அல்ல; சாத்திரம்தான். ஆகமப்படிதான் குடமுழுக்கு, பூஜைகள் செய்ய வேண்டும். தமிழில் ஆகமம் என்பதே இல்லை.தமிழில் மந்திரங்கள் இல்லாத நிலையில், செந்தமிழ் குடநீராட்டு என்று கூறி குடமுழுக்கு நடத்தி, தமிழில் மந்திரங்கள் சொல்கிறேன் என்று சொன்னால் கூட, சமஸ்கிருதத்தில் இருக்கும் மந்திரங்களையே மொழி பெயர்த்தாக வேண்டும். இப்படி செய்வது சட்ட விரோதம். இவ்வாறு டி.ஆர்.ரமேஷ் கூறினார்.
ஆதீனங்கள் எதிர்ப்பு: தமிழில் குடமுழுக்கு விழா நடத்த கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்கு, சைவ ஆதீனங்கள் தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சென்னைக்கு வந்த தருமபுரம் ஆதீனத்தை சந்தித்த, ஆன்மிக பெரியவர்கள் பலரும், தமிழக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த கேட்டு கொண்டனர். இதையடுத்து, இந்த பிரச்னையை எதிர்கொள்வது சம்பந்தமாக, தருமபுரம் ஆதீன தரப்பில், சைவ ஆதீனங்களை ஒன்றிணைக்கும் முயற்சி துவங்கி உள்ளது. - நமது நிருபர் -