பதிவு செய்த நாள்
08
மார்
2023
01:03
மாமல்லபுரம்: இருளர் பழங்குடி மக்களின் குலதெய்வம் கன்னியம்மன். ஆண்டுதோறும், மாசி மக பவுர்ணமி நாளில், மாமல்லபுரம் கடற்கரையில் இருளர்கள் குவிந்து, அம்மனை வழிபடுவர். தற்போது, மாசி மக பவுர்ணமி நாள், நேற்று முன்தினம் துவங்கி, நேற்று காலை வரை நீடித்தது. இதையடுத்து, குலதெய்வ வழிபாட்டிற்காக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து, குடும்பத்தினர், உறவினர் என, பல்லாயிரம் பேர், சில நாட்களாக, மாமல்லபுரத்தில் குவிந்தனர். கடற்கரை மணல்வெளியில், சேலை, படுதா விரிப்பு உள்ளிட்டவற்றில் அமைத்த தடுப்பு பகுதியில், குடும்பமாக தங்கினர். மளிகை பொருட்கள். பாத்திரங்கள் உள்ளிட்டவை வாங்கி, பகிங்ஹாம் கால்வாயில் மீன் பிடித்து, விறகு சேகரித்து, உணவு சமைத்து உண்டு, உறங்கினர்.
பவுர்ணமி நேற்று முன்தினமே துவங்கிய சூழலில், அன்றும் அம்மனை வழிபட்டனர். பெரும்பான்மையோர், நேற்று வழிபட்டனர். கடல் அலைகள் தழுவும் கரைப்பகுதியில், மணற்பரப்பில், குடும்பம் குடும்பமாக வழிபாட்டு திட்டு அமைத்தனர். திட்டு பரப்பிற்குள், விருப்பத்திற்கேற்ப ஏழு அல்லது ஒன்பது படிநிலைகள் அமைத்து, மலர்கள் பரப்பி, பழ வகைகள், வெற்றிலை பாக்கு, அரிசி மாவு உள்ளிட்டவற்றுடன் விளக்கு தீபம், கற்பூரம் ஒளிர வைத்தனர். கடலை நோக்கி, அம்மனை நினைத்து அரற்றியபடி, குடும்பத்தினர் ஒருவர் மீது கன்னியம்மனை வரவழைத்தனர். அம்மனிடம், படையல் ஏற்புடையதா என கேட்டு, குடும்பத்தினர் நலன், வாழ்க்கை மேம்பாடு குறித்து, அருள் வாக்கு கேட்டனர். பலருக்கு திருமணம் நடத்தினர். சிகை நீக்கி, காது குத்தி, வேண்டுதலை நிறைவேற்றினர். இவர்களின் விழிப்புணர்விற்காக, இருளர் அமைப்புகள் இணைந்து, கலை, கலாசார நிகழ்ச்சிகள் நடத்தின. கொத்தடிமையான சூழலிலிருந்து விலகுதல், கல்வி பயில்வதன் அவசியம், வேலை வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து விளக்கினர். இருளர் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் பாதுகாப்பை வலியுறுத்தும் நடனங்களை, இருளர் கலைக்குழுவினர் நிகழ்த்தினர். பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள, சென்னேரி பகுதி இருளர்கள் வடிவேல், மாசி ஆகியோரை கவுரவித்தனர்.
கூடுவாஞ்சேரி அடுத்த குமிழி பகுதியில், இருளர்களின் இலவச கல்விக்காக, 6 - 12ம் வகுப்பு வரை, ஆங்கில வழியில் இயங்கும் ஏகலைவா பள்ளியில் பயில்வது குறித்தும் விளக்கப்பட்டது. கலை, பண்பாட்டுத் துறை துணை இயக்குனர் ஹேமநாதன், தமிழக பழங்குடி மக்களின் வாழ்க்கை கலாசாரத்தை விளக்கும், 75 கலைகளை, தலா மூன்று நிமிடத்திற்கு ஆவணப்படம் எடுப்பதாக தெரிவித்தார். மேலும், இருளர் கலைக்காக, ஊட்டி, செங்கல்பட்டு பகுதி இருளர்களை நடிக்க வைத்து, இரண்டு படங்கள் எடுப்பதாகவும், அவற்றை உலகம் முழுதும் காணும் வகையில், சமூக வலைதளங்களில் ஒளிபரப்ப உள்ளதாகவும் தெரிவித்தார். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்காக, தமிழக பழங்குடியினர் நலத்துறை, 2 லட்சம் ரூபாய் மற்றும் கலை, பண்பாட்டுத் துறை, 1 லட்சம் ரூபாய் வழங்கியதாக, அரசுத் துறையினர் தெரிவித்தனர். மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம், குடிநீர், கழிப்பறை, நிகழ்ச்சி மேடை என ஏற்பாடு செய்தது. அரசு போக்குவரத்துக் கழகம், சிறப்பு பேருந்துகள் இயக்கியது. இருளர் சேவைகள் தொடர்பான தன்னார்வ நிறுவனத்தினர், அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வெளிநாட்டவர் முகாமிட்டு, இருளர் வழிபாட்டை கேமரா, கைபேசி ஆகியவற்றில் வீடியோ, புகைப்படம் எடுத்தனர். எங்களின் குலதெய்வம் கன்னியம்மன். 47 ஆண்டுகளாக, இங்கு வழிபடுகிறேன். அவர் கடலில் இருப்பதாக நம்பிக்கை. இங்கு வழிபட மூதாதையர் அறிவுறுத்தியுள்ளனர். அவரை வணங்கி, வீட்டிற்கு அழைத்துச் செல்லவே வழிபடுகிறோம். அவரும் எங்களை நன்றாக பாதுகாக்கிறார்.
- எல்லப்பன், 63, கீழ்சாத்தமங்கலம், வந்தவாசி.