பதிவு செய்த நாள்
10
மார்
2023
08:03
திருவாரூர்:திருவாரூர் அருகே அரசவனங்காடு அடுத்த செம்மங்குடி கோவிலில், நேற்று, 25ம் ஆண்டு மஹாமேரு மகோற்சவ விழா நடந்தது.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, அரசவனங்காடு அடுத்த, செம்மங்குடி ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் மஹாமேரு மகோற்சவம் நடந்து வருகிறது. கடந்த 6ம் தேதி மாலை 5:00 மணிக்கு, முதல்கால யாகசாலை பூஜையுடன், மஹாமேரு, 25ம் ஆண்டு சம்வத்ஸராபிஷேக மகோற்சவ விழா துவங்கியது. நேற்று காலை 8:00 மணிக்கு, ஆறாம் கால பூஜை துவங்கியது. காலை 10:00 மணிக்கு, யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு, கோவில் வளாகத்தில் வலம் வந்து, ஆனந்தவல்லி மற்றும் மஹாமேரு சன்னிதியை வந்தடைந்தன. காலை 10:30 மணிக்கு, ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமிக்கும், மஹாமேருவிற்கும் கலச அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்; இரவு 9:00 மணிக்கு, திருக்கல்யாண கோலத்தில் சுவாமிகள், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை, ஆனந்தவல்லி கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.