பதிவு செய்த நாள்
14
மார்
2023
07:03
கோபி: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற, பண்ணாரி மாரியம்மன் கோவில், பங்குனி குண்டம் தேர்த்திருவிழாவு முன்னேற்பாடு குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கோபி ஆர்.டி.ஓ., திவ்ய பிரியதர்ஷினி தலைமையில், நேற்று நடந்தது. சத்தியமங்கலம் ஏ.எஸ்.பி., அய்மன் ஜமால் முன்னிலை வகித்தார். அறநிலையத்துறை துணை கமிஷனர் மேனகா, தாசில்தார் சங்கர்கணேஷ் உடனிருந்தனர்.
ஏ.எஸ்.பி., அய்மன் ஜமால்: திருவிழாவுக்காக, 15 இடங்களில் வாகனம் நிறுத்தவும், மூன்று இடங்களில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று இடங்களில் போலீசாரின் தகவல் மையம், நான்கு இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படும். ஆர்.டி.ஓ., திவ்ய பிரியதர்ஷினி: வாகன நிறுத்தும் இடம் தேர்வாகி இருந்தால், அதை சம்பந்தப்பட்ட தாசில்தார் ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல் தகவல் மையம் மற்றும் கண்காணிப்பு கோபுரம் அமையும் பகுதிகளை ஆய்வு செய்து, வரும், 21ம் தேதிக்குள் அனைத்து வேலையும் முடிக்க வேண்டும். அறநிலையத்துறை துணை கமிஷனர் மேனகா: தண்ணீர் லாரி எளிதாக வந்து செல்ல வசதியாக, அனுமதி சீட்டு வழங்கினால் உபயோகமாக இருக்கும்.
ஏ.எஸ்.பி., அய்மன் ஜமால்: தண்ணீர், பால், காய்கறி வாகனங்கள் அனுமதிக்கப்படும். அறநிலையத்துறை, வருவாய்த்துறையில் பணியில் ஈடுபடுவோரின் பட்டியல் வழங்க வேண்டும். ஆர்.டி.ஓ., திவ்ய பிரியதர்ஷினி: குளோரின் கலந்த சுகாதார குடிநீர் வசதி செய்ய வேண்டும். எந்தவிதமான பிரச்னையுமின்றி, சுமூகமாக விழா நடக்க அனைத்து துறையினரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.