பதிவு செய்த நாள்
15
மார்
2023
12:03
தஞ்சாவூர் : பட்டுக்கோட்டையில், கோவிலில் திருடிய அம்மன் வெள்ளி கவசத்தை, திருடியவரே வைத்து விட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சவுக்கண்டி தெருவில், ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த 7ம் தேதி நடந்த மாசித் திருவிழாவின் போது, அம்மனுக்கு அரை கிலோ வெள்ளியால் கவசம் அணிவித்து, அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மறுநாள் காலை, அந்த வெள்ளி கவசம் திருடு போனது. இது குறித்து, கோவில் நிர்வாகி பாலசுப்பிரமணியம், பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் அளித்தார். புகார்படி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கோவில் நிர்வாகி பாலசுப்பிரமணியனுக்கு மொபைல் போனில் அழைப்பு வந்தது. பேசியவர், திருட்டு போன அம்மன் வெள்ளி கவசத்தை, கோவில் பந்தலுக்குப் பின்புறம் வைத்துள்ளேன்; எடுத்துக் கொள்ளுங்கள் என கூறி விட்டு, போன் அழைப்பை துண்டித்து விட்டார். அந்த நபர் கூறிய இடத்திற்கு சென்று பார்த்த போது, வெள்ளிக்கவசம் மஞ்சள் துணியில் சுற்றி வைக்கப்பட்டு இருந்தது. பின், கோவில் நிர்வாகி பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை நகர போலீசாருக்கு தகவல் அளித்தார். கோவில் நிர்வாகிக்கு வந்த மொபைல் எண்ணை வைத்து போலீசார், விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த அழைப்பு, திருப்பூரில் இருந்து வந்தது தெரிந்தது.