பதிவு செய்த நாள்
15
மார்
2023
06:03
தேவிபட்டினம்: கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால், நவபாஷாணத்திற்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
தேவிபட்டினம் கடலுக்குள் நவபாஷாண நவக்கிரகங்கள் அமைந்துள்ளன. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு தோஷங்களுக்கு, பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால், வெளிமாநிலங்களில் இருந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருவதால், காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே, ஓரளவு பக்தர்கள் வந்து செல்கின்றனர். காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை சுட்டெரிக்கும் வெயிலால், நவபாஷாணத்திற்கு ஒரு சில பக்தர்கள் மட்டுமே வந்து செல்கின்றனர். இதனால், வெயில் நேரங்களில், நவபாஷாண கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.