பதிவு செய்த நாள்
17
மார்
2023
09:03
கொல்லங்கோடு: கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் பங்குனி பரணி தூக்க திருவிழா நேற்று (16ம் தேதி) இரவு கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பரணி நாளில் பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. குழந்தை வரம் மற்றும் குழந்தைகள் நோய் நொடி இன்றி நீண்ட ஆயுளுடன் வாழ அம்மனை வேண்டி 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை விரதமிருக்கும் தூக்கக்காரர்கள் மூலம் ரதத்தில் ஏற்றி தூக்க நேர்ச்சை நடத்தப்படுகிறது. இங்கு அம்மனுக்கு இரண்டு கோவில்கள் உள்ளது. கொல்லங்கோடு கண்ணனாகத்தில் இருந்து மேற்கு நோக்கி 500 மீட்டர் தொலைவில் உள்ள வட்டவிளையில் மூலஸ்தான கோவில் அமைந்து உள்ளது.
கண்ணனாகத்தில் இருந்து கிழக்கு நோக்கி 500 மீட்டருக்கு அப்பால் வெங்கஞ்சியில் திருவிழாக் கோவில் அமைந்து உள்ளது. குழந்தைகளுக்கான தூக்கத்திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் இக்கோவில் நடக்கும். தூக்கத் திருவிழாவையொட்டி நேற்று அதிகலை பள்ளி உணர்த்தல், மஹாகணபதி ஹோமம், கொடிமரம் மேளதாளத்துடன் வெங்கஞ்சி கோவிலுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மாலை 3 மணிக்கு மூலகோவிலில் இருந்து மீண்டும் எழுந்தருளி கண்ணனாகம் சந்திப்பு வழியாக ஸ்ரீதேவி மகளிர் பள்ளி, கீழவீடு நாகராஜா காவு, இளம்பாலமுக்கு மஹாதேவர் கோவில் ஆகிய இடங்களில் இறக்கி பூஜைகளுக்கு பின் இரவு 7.30 மணிக்கு வெங்கஞ்சி திருவிழா கோவில் வந்தடைந்தது. 7.50க்கு திருக்கொடி ஏற்று நிகழ்ச்சி நடந்தது. கோவில் நிர்வாகிகள் முன்னிலையில் தந்திரி கொட்டாரக்கரை நீலமனை ஈஸ்வரன் போற்றி கொடி ஏற்றினார். துவக்க நிகழ்ச்சி கோவில் தலைவர் ராமசந்திரன் நாயர் தலைமையில் நடந்தது. ஈரோடு ஸ்ரீகந்த பாரம்பரிய சூரியனார் சேத்ர ஆதீனம் ஸ்ரீகாரியம் வாமதேவ ஸ்ரீமத் ஷிவாங்கர சேசிக சுவாமிகள் ஆசி வழங்கினார். எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன், கொல்லங்கோடு நகராட்சி சேர்மன் ராணி ஸ்டீபன் வாழ்த்துரை வழங்கினர். பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமசந்திரன் நாயர், செயலாளர் மோகன்குமார், இணைச் செயலாளர் பிஜூகுமார், துணைத்தலைவர் சதிகுமாரன் நாயர், பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி செய்து உள்ளனர்.